தேவனின் சித்தத்தை எப்படி அறிந்து கொள்வது?
Mon Mar 16, 2015 10:55 am
தேவனின் சித்தத்தை எப்படி அறிந்து கொள்வது?
டாக்டர். கேட்டிஸ் ஹட்சன்
"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” - ரோமர் 12:1,2.
இருபத்தொரு வருடங்களாக ஒரு போதகராக இருக்கையில், மக்கள் அடிக்கடி என்னிடம் ஆலோசனைக்காக வருவார்கள். அடிக்கடி கேட்கப்பட்ட ஒரு கேள்வி: "என்னுடைய வாழ்வுக்கான தேவனுடைய சித்தத்தை எப்படி நான் அறிந்து கொள்ளலாம்?” என்பதாகும்.
ஒரு இளம் பிரசங்கியாராக கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்வதற்கு எப்படி கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு பெரிய ஆத்துமாதாயம் செய்யும் சபையைக் கட்டுவதற்கு எனக்கு விருப்பம் இருந்தது. இந்த விருப்பமானது கடவுளினால் கொடுக்கப்படுகின்ற விருப்பமா? அல்லது எனது தனிப்பட்ட மகிமைக்கான சொந்த விருப்பமா? எனக் கேட்டேன். நான் என்ன செய்யவேண்டுமென கடவுள் விரும்புகிறார் எனத் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
என்னைப் பொறுத்தவரையில், கடவுளின் சித்தத்தைக் கண்டுபிடித்து, அதனைச் செய்யும் மனிதனே வெற்றியுள்ள மனிதனாவான்.
டாக்டர் போப் ஜோன்ஸ் சீனியர் அவர்கள், ஒரு ஹைப்பர் கல்வினிஸ்ருக்குப் பதிலளிக்கையில்: தேவனின் சித்தத்தில் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறினார். "நான் நரகத்திற்குப் போவது தேவனின் சித்தமாய் இருக்குமேயானால் நான் பரலோகத்திற்குப் போகத் தேவையில்லை. கடவுளின் சித்தமில்லாமல் நான் பரலோகத்தில் இருப்பதைவிட, கடவுளின் சித்தத்தின்படி நான் நரகத்தில் இருப்பது மேலானது. கடவுளுடைய சித்தத்தின்படி நான் நரகத்தில் இருப்பேனேயானால், நரகமும் பரலோகமாக இருக்கும்”.
கடவுளின் சித்தத்தில் இருப்பது மிகவும் முக்கியமாக இருக்குமேயானால், நாம் எப்படி அவரின் சித்தத்தை அறிந்து கொள்ள முடியும்? ரோமர் 12:2 கூறுவது: "… தேவனுடைய நன்மையும்,பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியுங்கள்.”
கடவுளின் சித்தத்தைப் பகுத்தறிவது சாத்தியமானது. நிச்சயமாக நீர் கடவுளுக்கு பகுத்தறிவிக்கத் தேவையில்லை. அவர் ஏற்கனவே அதை அறிபவர். நீர் வேறுயாருக்காவது பகுத்தறிவிப்பீரானால், அதை உமக்கே பகுத்தறிவித்துக் கொள்ளும். உமது வாழ்விற்கான கடவுளின் சித்தத்தை ஆராய்ந்து, கண்டுபிடிப்பது எப்படி என பல யோசனைகளை உருவாக்க எனக்கு அனுமதியுங்கள்.
1
1. உமது வாழ்விற்கான மிக முக்கியமான நோக்கமும், சித்தமும் தேவனுக்கு உண்டென தெளிவாக விளங்கிக் கொள்ளும்
ஒவ்வொரு விசுவாசிக்குமான ஒரு மிக முக்கியமான திட்டமும், நோக்கமும் அவரிடம் உண்டென்பதை விளங்கிக் கொள்வதே தேவனின் சித்தத்தை ஆராய்ந்து கண்டுபிடிக்க முயற்சிப்பதன் முதற்காரியமாய் உள்ளது. ஒரு முக்கியமான நோக்கமின்றி ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும், காற்றில் பறந்து கொண்டிருக்கும் ஒரு பஞ்சுத் துண்டு போன்றதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை. ஆனால், ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு பாதையும், இலட்சியமும் உண்டு.
நாம் இதைத் தெளிவாக விளங்கிக் கொண்டதும், கிறிஸ்தவ வாழ்வானது மிகவும் ஊக்கமுடையதாகுவதுடன், புது அர்த்தத்தையும் எடுக்கின்றது. இப்படியாக ஒரு சித்தம் வெளிப்படும் என ஒருவர் பரிபூரணமாக நம்பும் வரையில் தேவனின் சித்தத்தை முக்கியமானதொன்றாகக் கருதி, அதைத் தேடுவதில் இறங்கமாட்டார். ஏதாவதொன்று இருப்பது உமக்குத் தெரியும் வரையில்,அதைத் தேடுவதற்கான ஆர்வம் இருக்க மாட்டாது.
நான் ஒரு பையனாக இருந்தபோது, அடிக்கடி மீன்பிடிக்க சென்றேன். எப்படியாயினும், நான் ஒரு நல்ல மீன்பிடிப்பவனாக இருக்கவில்லை. நான் இலகுவில் அதைரியப்பட்டதுடன், கொஞ்சம் பொறுமையும் இருந்தது. சில நிமிடங்களின் பின், அந்தக் குளத்திலே மீன்கள் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஒரு பக்கத்தில் தூண்டிலை வைத்துவிட்டு, மரங்களுக்குள் விளையாடச் செல்ல எண்ணிக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்திற்குள் ஒருவரின் கூக்குரலைக் கேட்டேன், "இதற்கு யாராவது வந்து எனக்கு உதவி செய்யுங்கள்! நான் ஒரு பெரிய மீனைப் பிடித்து விட்டேன்!”என்றான். உங்களால் அந்த உத்வேகத்தை உணர முடியும். நான் குளத்தினுடைய கரைக்கு ஓடிச் சென்று 5 இறாத்தல் எடையுள்ள மீன், ஒரு நண்பனிடம் சிக்கியுள்ளதைக் கண்டேன். இந்த மீன் பிடித்தல், ஒரு புது அர்த்தத்தை எடுத்தது. நான் இதைக் குறித்து உத்வேகம் அடைந்தேன். நான் நேரத்தை வீணடிக்காது, தூண்டில்களை எடுத்துக்கொண்டு மீன்பிடித்தல்களுக்குத் தயாரானேன். அந்தக் குளத்தில் மீன்கள் உண்டென எனக்கு இப்போது நிச்சயமாகத் தெரியும்.
எம் ஒவ்வொருவருக்கும் தேவன் காண்பிக்கிறதை தனிப்பட்ட ஆர்வத்துடன் கவனிக்கிறபோது, அது திகைப்புள்ளதாக இருக்கும். "உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது”என மத்தேயு 10:30 கூறுகிறது. "அவர்கள் படும் வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” என யாத்திராகமம் 3:7 கூறுகிறது. "என் கண்ணீர்கள் அவர் கணக்கில் உள்ளது” என சங்கீதம் 56:8 கூறுகிறது."என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்” என சங்கீதம் 139:2 கூறுவதுடன், சங்கீதம் 139:2-6 வரை எமது எல்லா சிந்தனைகளையும், வழிகளையும் அவர் அறிந்திருக்கிறார் என கூறுகின்றது.
எம் ஒவ்வொருவர் மேலும் இவ்வளவு தனிப்பட்ட அக்கறையை கடவுள் காண்பிப்பாரானால், எமது வாழ்விற்கான மிக முக்கியமான திட்டமும், நோக்கமும் அவருக்கு உண்டென்று நாம் விசுவாசிக்க வேண்டும். ".....தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியுங்கள்".
2
2. தேவனின் சித்தத்தைக் குறித்து சரியான மனோபாவம் எமக்கு இருக்க வேண்டும்.
"அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ, அவன் இந்த உபதேசத்தை..... அறிந்துகொள்ளுவான்” (யோவான் 7:17). தெரிந்துகொள்ளும் ஆர்வமின்றி ஒருவரும் ஒருபோதும் கடவுளுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க மாட்டார்கள். கடவுளுடைய சித்தம் இன்னதென்று நாம் அறிந்து கொள்ளாத போதும், அவருடைய சித்தத்தைச் செய்ய எம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
"கேட்டிஸ், எனக்காக ஒன்று செய்வீர்களா?” என்று என் மனைவி அடிக்கடி கேட்பார்.
"ஆமாம், நான் செய்வேன்” என நான் ஒருபோதும் பதிலளி்த்ததில்லை. நான் எப்போதும், "அது என்ன?” என்றே கேட்பேன். அது என்னதென்பதை நான் முதலாவது அறிந்துகொள்ளும் வரை எதையும் செய்வதற்கு நான் என்னை அர்ப்பணிப்பதில்லை. ஆனால் இவ்வாறானதொரு வகையில் கடவுளின் சித்தத்தை நாம் அணுக முடியாது.
"கர்த்தாவே, உம்முடைய சித்தத்தை எனக்குக் காண்பியும், அதனைச் செய்வதா, இல்லையா என்பதை அப்போது நான் தீர்மானிக்க முடியும்” என்று சிலர் கூறுவதைக் குறித்து நான் பயப்படுகிறேன். ஆனால் கடவுள் கூறுவது, "நீ செய்வேன் என்பதைத் தீர்மானித்துக்கொள், அப்போது அது என்னதென்பதை நான் உனக்கு அறிவிப்பேன்” என்கிறார்.
"தேவனுடைய சித்தத்தைச் செய்ய நான் என்னை ஒப்புவிக்கும்போது, நான் செய்ய விரும்பாததொன்றைச் செய்ய அவர் என்னை வழிநடத்துவாராக இருந்தால் என்னவாகும்?” என்று ஒரு வாலிபன் என்னைக் கேட்டான். ஒருவிசை நான் யோசித்து விட்டு பின்பு பதிலளித்தேன், "நீர் உண்மையிலேயே கிறிஸ்துவை நம்பவில்லை. நீ என்ன சொல்லுகிறாய் என்றால், உனது வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்று தேவனுக்குத் தெரிந்ததைப் பார்க்கிலும் எனக்கு அதிகம் தெரியும் என்கிறாய்". நான் தொடர்ந்தும், "வாலிபனே, நீர் இருக்க வேண்டும் என தேவன் விரும்பும் இடத்தைவிட சந்தோஷமான இடத்தை காணமாட்டீர். நீர் செய்யவேண்டுமென தேவன் விரும்பும் காரியத்தைவிட நல்லதொரு காரியத்தை நீர் காணமாட்டீர்” என்றேன்.
நாம் எமது பெயர்களை ஒரு வெற்றுத்தாளின் அடியில் கையெழுத்திட்டு விட்டு, "அன்பான கர்த்தாவே, இப்போது இதை நீர் நிரப்பும். நான் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகின்ற எதையாகிலும் செய்வேன்" என்று கூற வேண்டும்.
1961ம் ஆண்டு என்னிடம் ஒரு சிறிய சபை இருந்தது. எனது பிரசங்கத்தினூடாக சிறிய பெறுபேற்றையே காணக்கூடியதாக இருந்தது. என்னுடைய இருதயம் ஆவலாக இருந்தது; எனக்கு அதிகமாகத் தேவைப்பட்டது. நான் வாழ வேண்டும் என்றிருந்ததை விட, கடவுளை அதிகமாகப் பிரியப்படுத்த வேண்டும் என்றிருந்தேன். ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் எனது முகத்தை வைத்துக்கொண்டு ஜெபித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. "அன்பான கர்த்தாவே, நீர் எங்கே என்னை வழிநடத்துவீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நான் என்னத்தைச் செய்ய வேண்டும் என நீர் விரும்புகின்றீரோ, அதையே செய்ய நானும் விரும்புகின்றேன். நான் எங்கேயாவது போவேன், எதையாவது செய்வேன், எப்படியாவது இருப்பேன். நான் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறதை செய்யாதபடிக்கு என்னைத் தடுக்கக் கூடிய ஒரே காரியம், எதுவென்று எனக்குத் தெரியாதது மாத்திரமே”. பின்னும் நான் சேர்த்துக் கொண்டது: "அன்பான கர்த்தாவே, இந்நிலையில், அது என் தவறாக இருக்கமாட்டாது; உமதாகவே இருக்கும்.”
இதை நான் என்னுடைய இருதய பூர்வமாகவே கருதுகிறேன். இதில் வெறுமனே கூறுவது ஒன்று, இருதய பூர்வமாகக் கருதுவது இன்னொன்று.
அவருக்கு வேண்டியது எதையாகிலும் கிறிஸ்துவுக்காக செய்யாதிருப்பீரேயானால், அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ள போதுமான அளவிற்கு உம்மை நீர் அர்ப்பணிக்கவில்லை."அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் எவனோ, அவன் இந்த உபதேசத்தை..... அறிந்து கொள்வான்.”
3
3. கடவுளுக்கென ஒரு பூரணமான ஒப்புக்கொடுத்தல் இருக்க வேண்டும்
"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” - ரோமர் 12:1,2.
"தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய நீர் விரும்புவீரானால், உங்கள் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள். உங்களை தேவனுக்கு அர்ப்பணியுங்கள். தேவனுக்கு உங்களை விட்டுக்கொடுங்கள். தேவனின் கரத்திலே ஒரு கருவியாக உங்களை வையுங்கள்" என்று பவுல் கூறுகின்றார்.
தேவனின் சித்தத்தை அறிந்துகொள்வதற்கு நீர் உபயோகப்படக் கூடியதாக இருக்க வேண்டும். நீர் தேவனால் உபயோகிக்கப்படக் கூடியதாக இருந்தால் மாத்திரமே, தேவனுக்கு பெறுமதியானவராக இருப்பீர்.
உபயோகிக்கப்படக் கூடியதாக இருத்தல் என்பது, இணங்கக் கூடியதாக இருத்தல் எனலாம் - எமது வாழ்வில் எல்லாப் பகுதியையும் திறந்திருத்தல், எல்லா நிலையையும் தேவன் நடத்த அனுமதிக்க விரும்புதலாகும்.
உயிர்மீட்சிக் கூட்டங்களுக்காக நான் பிரயாணங்களை மேற்கொள்கையில், விடுதிகளில் அதிக நேரத்தை செலவழித்துள்ளேன். காலை நேரங்களில் நான் சாப்பாட்டிற்காக செல்கையில், அநேக கதவுகளில், "என்னைத் தொந்தரவு செய்யாதே” என்று எழுதப்பட்டிருப்பதை அவதானித்தேன். உள்ளே இருப்பவர் என்ன கூறுகின்றாரெனில், "நீ என்ன வேண்டுமானாலும் வெளியே செய்யலாம்,ஆனால் உள்ளே வரவேண்டாம்” என்கிறார்.
எத்தனை விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் பலதரப்பட்ட பகுதிகளிலும் "தொந்தரவு செய்யாதே” என எழுதியுள்ளனர் என நான் ஆச்சரியப்படுகிறேன்.
தேவன் எமது வாழ்வின் எல்லா அறைகளுக்கும் வந்து எமக்கு வழிகாட்ட நாம் விரும்ப வேண்டும். காரியத்தைச் செய்பவர், தனது கரியத்தை தேவனே நடத்த வேண்டும் என விரும்ப வேண்டும் அல்லது தேவ கொள்கையின்படியிலாவது நடக்க வேண்டும்.
உபயோகிக்கப்படக் கூடியதாக இருத்தல் என்பது இணங்கக் கூடியதாக இருத்தல் எனக் கருதுவது மட்டுமல்லாமல்; ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, பிரியமானதாக இருத்தல் எனவும் பொருள்படும்.
ரோமர் 12:1 கூறுகிறது, ".....உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுங்கள்” நாம் எந்தப் பாவத்திற்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது. "என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” என சங்கீதம் 66:18 கூறுகிறது. இதன் கருத்து, எனது வாழ்க்கையில் பாவத்திற்கு விட்டுக்கொடுப்பேனாக இருந்தால், நான் தேவனை வழிகாட்டும்படி கேட்க முடியாது. நாம் பாவத்திற்கு பூரண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில விசுவாசிகள் பாவத்தை அறிக்கை செய்யும் போது, தாங்களாகவேதான் தேவனிடம் கூறுகின்றனர் என நினைக்கிறார்கள் என நான் யோசிக்கின்றேன். இல்லை, தேவன் ஏற்கனவே இதனை அறிபவர்; ஆகவே நீர் அதனை நன்கு அறிக்கை செய்து விட்டுவிடலாம். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என நீதிமொழிகள் 28:13 கூறுகிறது. ஒவ்வொரு தெரிந்த பாவத்தையும் அறிக்கையிடுங்கள்; உங்கள் சரீரத்தை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுங்கள்.
உபயோகிக்கப்படக் கூடியதாக இருத்தல் என்பது இணங்கக் கூடியதாக இருத்தல், பிரியமானதாக இருத்தல் என்பது மட்டுமல்லாமல், ஒத்துப்போகும் குணமுடையதாயிருத்தல் எனவும் பொருள்படும். "தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாகுங்கள்.” நாம் ஏதோவொன்றைச் செய்ய வேண்டுமென தேவன் விரும்புவாரானால் நாம் அதனை ஒத்துக் கொள்ள விரும்ப வேண்டும்.
"ஜோர்ஜியா இராஜ்யத்திலுள்ள 7,900 த்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட பெரிய சபையை உங்களால் எப்படி இராஜினாமா செய்ய முடிந்தது?” என நான் அடிக்கடி கேட்கப்பட்டேன். ஏதோ தவறு இருந்திருக்க வேண்டுமென சிலர் கருதினர். இல்லை - தேவன் எனக்கு வேறொன்றை வைத்திருக்கிறார் என்பதை நான் அறிந்திருந்தேன்; ஆகவே அந்தத் தீர்மானத்தை மேற்கொள்வது எனக்கு கடினமாக இருக்கவில்லை. நான் கர்த்தரிடத்தில் அவர் விரும்பும் எதையும் நான் செய்வேன், நான் எங்கே போக வேண்டுமென தேவன் விரும்புகின்றாரோ அங்கே போவேன், நான் என்னவாக இருக்க வேண்டுமென தேவன் விரும்புகின்றாரோ அவ்வாறு இருப்பேன் என்பதை 1961ம் ஆண்டு தீர்மானித்தேன்.
நான் எனது நண்பர்களை இழந்தேன் என்பது நிச்சயம், இன்னமும் நான் அவர்களை மிகவும் நேசிக்கின்றேன். ஆயினும் நான் தேவனின் சித்தத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் எனக்கு அநேக ஆச்சரியமான புதிய நண்பர்களை "கர்த்தரின் பட்டயம்” எனும் ஊழியத்தில் தந்துள்ளார்.
நீங்கள் "தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய” வேண்டுமானால், "உங்கள் சரீரங்களை தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடு்ங்கள், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை”. ஒரு அறிவுள்ள தலைக்கான நிபந்தனை, ஒப்புவிக்கப்பட்ட இதயமாக இருக்கிறது.
4
Re: தேவனின் சித்தத்தை எப்படி அறிந்து கொள்வது?
Mon Mar 16, 2015 10:55 am
4. சந்தேகமாக இருக்கும்போது, அதனை விட்டுவிடும்
".....விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” என ரோமர் 14:23 கூறுவதுடன், ரோமர் 14:5 "அவனவன் தன் தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக் கடவன்” எனக் கூறுகிறது.தேவன் ஒரு குறிப்பிட்ட வழியிலே வழிநடத்துவதாகக் காணப்படுமாக இருந்தும், சந்தேகம் இருக்குமாயின், சந்தேகத்தின் பலனை தேவனிடம் விட்டுவிடுவது எப்பொழுதுமே பாதுகாப்பானது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு தம்பதியினர் ஞாயிறு பாடசாலைக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். கணவன் உரத்த சத்தமாக, "தேனே! இந்த மேற்சட்டை அழுக்கானதா?” எனக் கேட்டார்.
அதற்கு அவள் உரத்த சத்தமாக, "எனக்கு தெரியாது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றாள்.
"நல்லது, இது பரவாயில்லைப் போல் இருக்கிறது” என்றார் அவர். அதற்குப் பதிலாக அவரின் மனைவி, "அது சந்தேகமாக இருக்குமேயானால், அது அழுக்கானது தான்!” என்றாள்.
நாம் செயற்படும் முன்பதாக ஒரு காரியத்தைக் குறித்து முழு நிச்சயம் இருப்பது ஞானமானது என நான் கண்டுள்ளேன். நான் அடிமை, தேவன்தான் எஜமான். எஜமானுக்கு என்ன வேண்டுமென ஊகிப்பது அடிமையின் காரியமல்ல. அடிமை கீழ்ப்படிய வேண்டியவர். தெளிவான கட்டளையைக் கொடுப்பது எஜமானின் பங்காகும்.
தேவனின் சித்தத்தைக் கண்டுகொள்வது, நாம் வைக்கோற் போருக்குள் ஊசியைத் தேடுவது போல இருக்கக் கூடாது. நாம் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென தேவன் விரும்புவாரேயானால், அதனை எமக்குத் தெளிவாகக் காண்பிக்கவும் அவரால் இயலும். சிலவேளைகளில் ஒரு காரியத்தைக் குறித்து எனக்கு சந்தேகமாக இருந்தும், வேதாகமத்திலும் தெளிவாக இல்லாத பட்சத்தில், "அன்பான கர்த்தாவே! நான் உம்முடைய சித்தத்தையே செய்ய வேண்டும். ஆனால், அது எதுவென்று எனக்கு நிச்சயமில்லை. நீர் அதை தெளிவாக எனக்குக் காண்பிப்பீரேயானால், நான் சந்தோஷத்துடன் அதனைச் செய்வேன்” என ஜெபிப்பேன். தேவன் எப்போதும் பதிலளிப்பார்! சந்தேகமாக இருக்கும்போது அதனை விட்டுவிடும்.
5
5. அந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு சமாதானம் இருக்கிறதா?
"தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது” (கொலோசெயர் 3:15). ஒரு மொழிபெயர்ப்பு, "தேவ சமாதானம் மத்தியஸ்தம் வகிக்கக் கடவது” என்றும், இன்னொரு மொழிபெயர்ப்பு, "தேவ சமாதானம் உங்களுக்காகக் காரியங்களைத் தீர்மானிக்கக் கடவது” என்றும் கூறுகிறது. உங்களுக்கு இதனைக் குறித்து சமாதானம் இருக்கிறதா?
நான் எனது இரண்டாவது காரை வாங்கியபோது, அந்த அனுபவம் எனக்கு ஒரு பாடத்தைக் கற்பித்தது. நான் இந்த அழகான, மினுமினுப்பான ஹட்சன் ஜெட்டை, பாவித்த கார்கள் கூட்டத்திற்குள் கண்டேன். நான் அதிக தடவைகள் அதனைப் பார்த்தேன். அது உள்ளும் புறமும் துப்பரவாக இருந்தது. என்னால் செலுத்தக் கூடியதாக இருந்த தொகையிலும் ஒரு கொஞ்சம் கூடுதலாக இருந்தது,எனினும் அது எனக்குத் தேவைப்பட்டது. நான் அதிக தடவைகள் அதனை வாங்கச் சென்றேன். எனினும், நான் அதைக் குறித்து இலகுவாக உணரவில்லை. நான் இதனை எடுத்துக்கொள்வேன் என அந்த வர்த்தகரிடம் சொல்ல எண்ணியபோது, ஏதோ உள்ளுணர்வில் கடினமாக இருந்தது; எனக்கு அதைக் குறித்து சமாதானம் இருக்கவில்லை. எனினும் நான் அதனை ஒருவாறு வாங்கிக் கொண்டேன்.
அந்தக் கார் ஒரு பிரயோஜனம் அற்றது என நம்புகிறீர்களா? நான் ஒருவாரம் கூட வைத்திருக்கவில்லை. இயந்திரத்தில் ஒரு முக்கிய உறுப்பு (Transmission) பழுதடைந்து விட்டது. பலநூற்றுக்கணக்கான டொலர்கள் செலவானது. நான் வருத்தப்பட்டேன்.
ஒரு சில வாரங்கள் கழித்து வேறேதோ எல்லாம் பழுதாகியது. நான் அதனை விற்கும் வரையில் அல்லது கொடுத்துத் தீர்க்கும் வரையி்லும் பிரச்சினைகளே அல்லாமல் வேறொன்றும் இருக்கவில்லை.
ஒரு குறிப்பிட்ட திசையில் தேவன் உம்மை வழிநடத்துகின்றார் என நீர் நினைப்பீரானால், அவர் அதற்கான சமாதானத்தையும் உமக்குத் தருவார். உமக்கு சமாதானம் இருக்கும் வரைக்கும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்காதபடிக்கு ஞானமாய் இருக்க வேண்டும். தேவ சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளக்கடவது!
6
6. ஏற்கனவே உம்மிடமுள்ள ஒளியிலே நடவும்
தேவன் திட்டமிட்டுள்ள எல்லாவற்றையும் நாம் காணக்கூடிய சந்தர்ப்பம் எதுவுமே விசுவாசியின் வாழ்வில் இல்லை. ஏனெனில், கிறிஸ்தவ வாழ்வானது ஒரு விசுவாச வாழ்வாக இருக்கிறது. எப்படியாயினும், அடுத்த அடி எடுப்பதற்கு போதுமான ஒளியை நம் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுக்கிறார். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது" என சங்கீதம் 119:105 கூறுகிறது.
முன்பக்கத்தில் ஒரு விளக்குடன் (Lamp) கூடிய சுரங்க வேலை செய்பவரின் தொப்பி ஒன்றை நீர் எப்போதாவது கண்டுள்ளீரா? ஒரு சுரங்கவேலை செய்பவர் சுரங்கத்தினுள் நிற்கிறார் என்றும்,அவருக்கு முன்பாக இருபத்தைந்து அடி தூரத்திற்கு அந்த ஒளி பிரகாசிக்கின்றது என்றும் எண்ணிக்கொள்ளுங்கள். சுரங்கவழியின் முடிவை நான் காணும் வரை அடுத்த அடியை எடுக்கப் போவதில்லை என அவர் கூறுவாரானால், அவர் ஒருபோதுமே அடுத்த அடியை எடுக்க மாட்டார். அவர் தன்னிடத்தில் ஏற்கனவே உள்ள ஒளியில் நடக்கும் வரைக்கும், அவர் மேலதிக ஒளியை ஒருபோதும் பெறமாட்டார். ஆனால் அந்த ஒளியில் அவர் நடக்கையில், அவர் தனக்கு முன்னதாக ஒரு ஒளி அசைவைதக் கண்டுகொள்வார். எவ்வளவு அதிகமாக அவர் நடக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஒளி நகரும்.
அவ்வாறே ஒரு விசுவாசியும் அடுத்தடுத்த அடிகளை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இப்பொழுதிருந்து 25 வருடங்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என சில வேளைகளில் கவலையோடிருக்கும் கிறிஸ்தவக் கல்லூரிகளில் உள்ள வாலிபர்களுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். நாம் ஒரு மிஷனரியாக, சுவிசேஷகராக அல்லது ஒரு போதகராக எதுவாக இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார் என நிச்சயம் அற்றவர்களாக சிலர் இருந்தனர்.
நான் எப்பொழுதும் ஆலோசனை கொடுப்பது: "நீங்கள் உங்களை பூரணமான ஒப்புவித்தலுடன் தேவனுக்கு உபயோகப்படக் கூடியதாக உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார். அதற்கிடையில் உங்களால் முடிந்தவரை திறமையான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளுங்கள். பாடசாலையில் இருந்து, கவனமாகப் படித்து, அடுத்த வெள்ளிக்கிழமை பரீட்சையில் சித்தி பெறுங்கள்" என்பதாகும்.
உங்களிடத்திலுள்ள ஒளியிலே நடவுங்கள். தேவன் மேலதிக ஒளியைத் தருவார். பேதுருவானவர் சிறையில் இருந்தபோது, இரும்புக் கதவண்டை நடந்து வரும் வரையிலும் அது திறந்திருக்கவில்லை. (அப்போஸ்தலர் 12:10 ஐ வாசிக்கவும்).
இன்றைக்கான அவரது சித்தம் இன்னதென்று நீர் கண்டு செயற்படும் வரை, அடுத்த வாரத்திற்கான அவரின் சித்தத்தைக் காண்பிக்கும்படி தேவனிடம் எதிர்பார்க்க வேண்டாம். நாம் தூரநோக்கை எடுக்க தேவன் எம்மை அனுமதிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. சிலருக்கு அதிக தூரத்திற்குப் பார்க்க முடியுமாக இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு விசுவாசிக்கும் அடுத்த அடி எடுப்பதற்குப் போதுமான ஒளி உண்டு.
7
7. உமது விருப்பங்கள் தேவ சித்தத்தை உறுதிசெய்ய, உதவ இடமளியும்
"ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” என பிலிப்பியர் 2:13 கூறுகிறது.
எமது வாழ்க்கை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்குமானால், அவர் சரியான விருப்பத்தை எமக்குக் கொடுப்பார். "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வர்” என சங்கீதம் 37:4 கூறுகிறது.
முக்கியமான காரியங்களைக் குறித்து நான் என்ன செய்வதென்று தெரியாதிருந்த போதிலும் நான் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்,ஆனால் அது சரியா என்ற நிச்சயம் எனக்கு இருக்கவில்லை. என்னுடைய விருப்பமும் அவரின் சித்தமும் ஒன்றாக இருக்க வேண்டுமென நான் கர்த்தரிடம் கேட்டேன்; ஆகவே ஒரு காரியத்தை நான் செய்ய விரும்புகையில், அவரின் சித்தத்தை நான் அறிவதற்காக போராடத் தேவையில்லை. பிலிப்பியர் 2:13 ஐ நான் மீண்டும் மீண்டும் வாசித்துள்ளேன். "ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” தேவன் விருப்பத்தை மாத்திரம் கொடுக்கிறவராயிராமல், அந்த விருப்பத்தை நிறைவேற்ற வல்லமையும் கொடுக்கிறார். நாம் என்ன செய்ய வேண்டுமென தேவன் விரும்புவதைச் செய்வதில் மகிழ்ச்சியும், நிறைவேற்றுவதில் அர்த்தமும் உண்டு.
8
8. பரிசுத்த ஆவியானவர் எம்மை வழிநடத்த போதுமானவர்
"மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14). அநேக காரியங்கள் வேதவாக்கின் மூலம் எமக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அவைகளைக் குறித்து தேவனின் சித்தத்தைக் கேட்கத் தேவையில்லை. தேவ சித்தமும், தேவ வார்த்தையும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும், அவை ஒருபோதும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கமாட்டாது.
ஆத்துமாதாயம் செய்வது தேவனின் சித்தம் என்று எமக்குத் தெரியும். ஆகவே பரிசுத்த ஆவியானவரின் விசேஷித்த வழிநடத்தலுக்குக் காத்திருக்கவோ, ஜெபி்த்துக் காத்திருக்கவோ வேண்டியதில்லை. "நீங்கள் உலகம் எங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என மாற்கு 16:15ம் வசனம் கட்டளையிடுகின்றது. அத்துடன் யோவான் 15:16 இல் இயேசு கூறினார்: "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கு நான் உங்களை ஏற்படுத்தினேன்”. ஒரு கிறிஸ்தவன் தனக்கு பரிசுத்தாவியானவரின் விசேஷித்த வழிநடத்தல் இல்லை எனக் கூறி ஆத்துமாதாயம் செய்வதை நிராகரிப்பது, வேதவாக்கின் ஒரு தெளிவான கட்டளைக்குக் கீழ்ப்படியாததை மூடி மறைப்பதாகும்.
பாவிகளின் இரட்சிப்பைக் குறித்த காரியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என வேதாகமம் 2பேதுரு 3:9 இல் தெளிவாக்குகின்றது.
தசமபாகம் செலுத்துவதற்கு ஒரு விசேஷித்த வழிநடத்துதல் எமக்குத் தேவையில்லை. "தசமபாகம் எல்லாம் கர்த்தருக்குரியது” என லேவியராகமம் 27:30 கூறுகிறது. எமது வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி கர்த்தருக்குரியது என்று எமக்குத் தெரியும். நாம் இதனை எங்கே கொடுப்பது எனக் கேட்கலாம். ஆனால் ஏற்கனவே வேதவசனத்தில் முடிவெடுத்திருக்கையில் நாம் இதைக் கொடுப்பதா என்பதைக் குறித்து ஜெபிக்கத் தேவையில்லை.
இப்போது வேதவசனத்தில் முடிவெடுக்கப்படாத சில காரியங்கள் உண்டு. உதாரணத்திற்கு, எந்த சபையில் இணைந்து கொள்ள வேண்டும் என வேதாகமம் கூறவில்லை. "குறிப்பிட்ட ஒரு பட்டணத்திலுள்ள முதல் பப்டிஸ்ற் சபையில் இணைந்து கொள்வாயாக” என இது கூறவில்லை. ஆகவே அவரின் தெரிவின்படியான சபைக்கு எம்மை வழிநடத்தும்படி தேவனிடம் ஜெபித்து,கேட்க எமக்கு உரிமை உண்டு. நாம் சபைக்குப் போக வேண்டும்; "சபை கூடி வருதலை சிலர் விட்டுவிடுவது போல நாமும் விட்டுவிடாமல்.....” (எபிரெயர் 10:25). ஆனால் நாம் எந்த சபையில் கூடிவர வேண்டும் என இந்த வசனம் கூறவில்லை. ஆகவே இந்தக் காரியத்தைக் குறித்து ஜெபிக்க எமக்கு உரிமை உண்டு. வேதாகமம் தெளிவான அறிவுறுத்தலை கொடுக்குமானால், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை.
வாலிபனுக்கு எந்தப் பெண்ணை விவாகம் செய்யவேண்டும் என்றோ, பெண்ணுக்கு எந்த வாலிபனை விவாகம் செய்ய வேண்டுமென்றோ வேதாகமம் கூறவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலை கட்டாயம் கேட்க வேண்டும். எப்படியாயினும், "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” (2 கொரிந்தியர் 6:14) என வேதாகமம் கூறுகிறது. இங்கே ஒரு வழிகாட்டல் உண்டு. கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதவரைத் திருமணம் செய்யக்கூடாது. ஆனால் அநேகமான கிறிஸ்தவப் பெண்கள் இருக்கையில், சரியானதைத் தெரிந்துகொள்ள பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலை வாலிபன் எதிர்பார்க்கலாம். தேவனின் ஆவியானவர் ஒருபோதும் தேவனின் வார்த்தைக்கு முரணாக வழிநடத்த மாட்டார்.
"நான் ஒரு குறிப்பிட்ட நபரை விரும்புகின்றேன். நான் அவரைத் திருமணம் செய்யப் போகின்றேன்” என ஒரு இளம் பெண் என்னிடம் கூறினார்.
"அவர் ஒரு கிறிஸ்தவரா?” எனக் கேட்டேன்.
"இல்லை”
"அப்படியாயின் நீங்கள் அவரைத் திருமணம் செய்யக் கூடாது”
ஆயினும் அவள், "நான் இதைக் குறித்து ஜெபம் பண்ணினேன், இது கடவுளின் சித்தம் என எனக்குத் தெரியும்” என்றாள்.
"அன்பான பெண்ணே, தேவன் ஒருபோதும் தமது வார்த்தைக்கு விரோதமாக வழிநடத்த மாட்டார்; அத்துடன், 'அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக' என 2கொரிந்தியர் 6:14 கட்டளையிடுகிறது" என நான் கூறினேன்.
ஆனாலும் அவள் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல், அந்த நபரைத் திருமணம் செய்து கொண்டாள். அவள் ஒரு பெரும் துன்பமுள்ள வாழ்க்கைக்கு உள்ளானாள் என்பதைக் கூற நான் துக்கப்படுகிறேன்.
இதனை நிறைவுசெய்கையில், நான் மீண்டும் கூறுவது, அநேகமான காரியங்கள் தேவ வார்த்தையில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பாக கூறாதவிடத்தில், அவரின் சித்தத்தை எமக்குக் காண்பிக்கும்படி, தேவனை எதிர்பார்க்க எமக்கு உரிமை உண்டு.
தேவனின் சித்தம் கட்டாயமாக மாற்றமடையும் என கருதக்கூடாது. தேவன், நீர் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாரோ அதனை ஏற்கனவே நீர் செய்து கொண்டிருக்கலாம்.
தேவ சித்தத்தை அறிந்து செயற்படுவதே வெற்றியளிக்கும்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum