காரம் என்ன செய்யும்?
Thu Feb 05, 2015 6:10 pm
தமிழ் பேஸ்புக் நியூஸ் with Ignu Jo
காரம் என்ன செய்யும்?
காரம் தூக்கலான உணவுகள்தான் உள்ளே இறங்கும் சிலருக்கு. இன்னும் சிலருக்கோ காரம் நாக்கில் பட்டாலே, உதடு முதல் உள்ளங்கால் வரை எரியும். காரமான உணவுகள் உண்பதால் உடலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்கிற பயம் பலருக்கும் உண்டு. தெளிவாக்குகிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தீபக் சுப்ரமணியன்.
‘‘எப்போதாவது காரமான உணவு சாப்பிடுவதால் பிரச்னை இல்லை. தொடர்ந்து கார உணவுகளையே சாப்பிட்டு வரும் ஒருவருக்கு நாளடைவில் பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். இந்த பாதிப்பு உணவுப்பாதையின் தொடக்கமான தொண்டையில் ஆரம்பித்து மலத்துவாரம் வரை எல்லா இடங்களிலும் பாரபட்சமில்லாமல் தொந்தரவுகளை உருவாக்கும்.
அதிலும், வயிற்றுப்பகுதிதான் கார உணவுகளால் அதிகம் பாதிப்படைகிறது. ஆரம்பத்தில் நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கி, பிறகு சின்னச் சின்னதாக புண்களை(Gastritis) வயிற்றில் ஏற்படுத்தும். இது நாளடைவில் பெப்டிக் அல்சராக விஸ்வரூபமெடுக்கும். இந்த பெப்டிக் அல்சர் நாளடைவில் புற்றுநோயாக மாறும் அபாயமும் உண்டு. அதனால் ஊறுகாய், மசாலா பொருட்கள் எதுவாக இருந்தாலும் அளவான காரத்தோடு தான் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு காரமாக சாப்பிட்டால்தான் சாப்பிட்டது
போலவே இருக்கும். அவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தலாம்.
அதற்காக மிளகையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி விடக் கூடாது. தவிர்க்க இயலாமல் கார உணவுகளை சாப்பிட்ட நாளில் தயிர், மோர், சர்க்கரை கலந்த தயிர் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்வது அதன் பாதிப்புகளைக் குறைக்கும். பொதுவாகவே சாப்பிட்ட பிறகு 2 அல்லது 3 மணிநேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். காரமான உணவுகள் சாப்பிட்ட பிறகு இந்த விதியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் கார உணவில் இருந்து கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது. கார உணவுகளினால் வயிற்றில் புண்ணோ, அல்சரோ ஏற்பட்டால் அதற்கென பிரத்யேகமாக மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.
இதனால் செரிமான சக்தி குறையும், வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சிரமங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும். இது, கர்ப்பிணிகளுக்கு மேலும் சிரமத்தை உண்டாக்கும் என்பதால் கார உணவு விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியம். இது தவிர, காரமான உணவு மனிதர்களுக்கு அதிக கோபம் உட்பட பல உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்குகிறது என்றும் பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் கார உணவுகளுக்கு எப்போதும் ஸ்ட்ராங்காக ‘நோ’ சொல்லுங்கள்!’’
Permissions in this forum:
You cannot reply to topics in this forum