30 வகை சூப் - இரசம், கஞ்சி வகைகள்
Mon Jan 19, 2015 8:45 pm
காலிஃப்ளவர் சூப்
தேவையானவை: நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் – ஒரு கப், காலிஃப்ளவர் தண்டு – அரை கப் (பொடியாக நறுக்கியது), பால் – ஒரு கப், மிளகுத்தூள் – சிறிதளவு, கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு – 5 பல், நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி… உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் அல்லது வெண் ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.
வெண்டைக்காய் சூப்
தேவையானவை: வெண்டைக்காய் – 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி, பெரிய வெங்காயம் – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, காராபூந்தி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு நீர் – 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்), சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: வெண்டைக்காயை நறுக்கி, வெறும் கடாயில் வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்). வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, வெண்டைக்காயை சேர்க்கவும். இத னுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, எலு மிச்சைச் சாறு சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை தூவவும். மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.
முருங்கை சூப்
தேவையானவை: முருங்கைக்காய் – 2 (சதைப் பற்றுள்ளது), மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ஒன்று, பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: முருங்கைக்காய், உருளைக்கிழங்கை நறுக்கி, நீர் விட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். முருங்கையின் சதையை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பில் ஒன்றரை கப் நீர் ஊற்றி, குக்கரில் வேகவிட்டு மசித்து, தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பருப்பு நீரில் மசித்த உருளைக்கிழங்கு, முருங்கை சதைப்பகுதியை போட்டு கரைக்கவும். இந்தக் கரைசலை வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வெண்ணெய், நெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சூப் செய்யும்போது, எப்போதும் மிதமான தீயிலேயே செய்யவும். நடுநடுவே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஹெர்பல் சூப்
தேவையானவை: துளசி இலை – அரை கப், வெற்றிலை – 4, கற்பூரவல்லி இலை – 2, புதினா இலை – கால் கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டுப் பல் – 2, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். எல்லா இலைகளையும் சுத்தமாகக் கழுவி இதனுடன் சேர்த்து வதக்கவும். இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பரிமாறும்போது சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
டொமேட்டோ க்ரீம் சூப்
தேவையானவை: பெரிய, பழுத்த சிவப்பு தக்காளி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள், சர்க்கரை – தலா அரை டீஸ்பூன், பால் – கால் கப், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலையை வதக்கி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். தக்காளி நன்றாக வெந்ததும் பெரிய கண் உடைய வடிகட்டியில் வடிகட்டி, தக்காளி, வெங்காயத்தை நன்றாக மசிக்கவும். வடிகட்டிய தண்ணீரில் மசித்த விழுது, தக்காளி சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும். கார்ன்ஃப்ளாரை பாலில் கரைத்து அந்த கரைசலையும் சேர்த்துக் கலந்து மீண்டும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்கவிடவும். சூப்பை இறக்கி சர்க்கரை சேர்க்கவும்.
விருப்பப்பட்டால், சூப்பின் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ள லாம்.
சைனீஸ் வெஜ் சூப்
தேவையானவை: பீன்ஸ் – 50 கிராம், கேரட் – ஒன்று, முட்டைகோஸ் – 100 கிராம், வெங்காயத்தாள் – ஒன்று, அஜினமோட்டோ – அரை டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக் கேற்ப.செய்முறை: அனைத்து காய்கறிகளையும் மெலிதாக ஒரே அளவாக நீட்டமாக (தீக் குச்சி போன்ற துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து… அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சோயா சாஸ் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும். கொதிவரும்போது, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சூப்பில் சேர்க்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
புழுங்கல் அரிசி – பழக் கஞ்சி
தேவையானவை: புழுங்கலரிசி – ஒரு கப், பால் – 2 கப், நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் – ஒன்று (மசிக்கவும்), பொடியாக நறுக்கிய ஆப்பிள் – கால் கப்.செய்முறை: புழுங்கல் அரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பால், நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கரைத்து, குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் இறக்கி, மசித்த வாழைப்பழம், நறுக்கிய ஆப்பிள் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால், புழுங்கல் அரிசியை மாவு மாதிரி நைஸாக அரைத்துக்கொள்ளலாம்.
சேமியா – மில்க் சூப்
தேவையானவை: கேரட், தக்காளி – தலா ஒன்று, பீன்ஸ் – 4, துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன், சேமியா – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், உப்பு, சர்க்கரை – தேவைக்கேற்ப.செய்முறை: கேரட்டை துருவிக்கொள்ளவும், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கவும். இவற்றுடன் போதிய அளவு நீர் விட்டு வேக வைக்கவும். சேமியாவை தேவையான தண்ணீர் விட்டு தனியாக வேகவைத்து எடுத்து வைக்கவும். கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு சூடாக்கி, மைதாவை குறைந்த தீயில் 2 நிமிடங்கள் வறுக்கவும். (நிறம் மாறக் கூடாது). பிறகு பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டித்தட்டாமல் கலந்துகொண்டு… தேவையான சர்க்கரை, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். வெந்த சேமியாவை சேர்த்துக் கிளறவும், வேகவைத்த காய்கறி கலவையை இதில் ஊற்றிக் கிளறி இறக்கவும். பரிமாறும்போது துருவிய சீஸ் சேர்த்து, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: சேமியாவுக்கு பதில் நூடுல்ஸ், பாஸ்தா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
ஸ்பைஸி கார்ன் சூப்
தேவையானவை: வெள்ளை சோள முத்து – கால் கப், (10 மணி நேரம் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் – ஒன்று, முட்டைகோஸ் – கால் கப் (நீளமாக துருவியது), சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, வெண்ணெய் – 2 டீஸ்பூன்.செய்முறை: வெள்ளை சோள முத்தை 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய வெள்ளை சோள முத்து, நறுக்கிய முட்டை கோஸ் உடன் நீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் நீரை வடிகட்டி… காய்கறி, தண்ணீரை தனித்தனியாக வைக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பூண்டு விழுது, உப்பு, சில்லி சாஸ் சேர்த்து மேலும் வதக்கி, காய்கறி வேகவைத்த நீரை ஊற்றி ஒரு கொதி விடவும். பிறகு, வடிகட்டி வைத்த கோஸ், சோளத்தை சேர்த்துக் கிளறி, 2 நிமிடங்களுக்குப் பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
Re: 30 வகை சூப் - இரசம், கஞ்சி வகைகள்
Mon Jan 19, 2015 8:47 pm
பீட்ரூட்- வீட் கஞ்சி
தேவையானவை: பீட்ரூட் – கால் கப் (சிறு சதுரமாக வெட்டவும்), சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), தக்காளிச் சாறு – கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கோதுமை கஞ்சி மாவு – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.கோதுமை கஞ்சி மாவு செய்ய: முழு சம்பா கோதுமை – கால் கிலோ, எள் – 50 கிராம், பொட்டுக்கடலை – 150 கிராம் (கோதுமை, எள்ளை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு, நீண்ட நாள் பயன்படுத்தலாம்).
செய்முறை: சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும். 4 டேபிள்ஸ்பூன் கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி, வெந்த பீட்ரூட் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.
கம்பு – கேப்பங்கஞ்சி
தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், கம்பு மாவு – அரை கப், அரிசி நொய் – அரை கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், கடைந்த தயிர் – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும். மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும். அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.
சீரகம் – புழுங்கல் அரிசி கஞ்சி
தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – 25 கிராம், தயிர் – ஒரு கப் (கடைந்தது), உப்பு – தேவையான அளவு,செய்முறை: புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் அடித்து ரவை போல உடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டால்… நன்றாக குழைந்து வெந்துவிடும். பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.
இஞ்சி – தக்காளிக்காய் சூப்
தேவையானவை: இஞ்சிச் சாறு – கால் கப், தக்காளிக்காய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சூப் ‘ஸ்டாக்’ – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.ஸ்டாக் செய்ய: வெங்காயம் – ஒன்று, உருளைக்கிழங்கு – ஒன்று ஓமம் – ஒரு டீஸ்பூன் (ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி போட்டுக்கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, ஓமம் சேர்த்து காய்கறி மூழ்கும் அளவு நீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும்.வெந்ததும் கீழே இறக்கி வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை (ஸ்டாக்) சூப் செய்ய பயன்படுத்தலாம்).
செய்முறை: சிறிய குக்கரில் வெண்ணெய் விட்டு பச்சைப் பட்டாணி, கீறிய பச்சை மிளகாயை வதக்கி, தேவையான அளவு `சூப் ஸ்டாக்’கை ஊற்றவும். கொதி வந்ததும் சீரகத்தூள், உப்பு சேர்த்து, இஞ்சிச் சாறு ஊற்றிக் கிளறி இறக்க வும். கொத்தமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: ‘ஸ்டாக்’ செய்யப் பயன்படுத்திய காய் கறியை, வீணாக்காமல் சமையலில் சேர்க்கலாம்.
அவல் கஞ்சி
தேவையானவை: அவல் – ஒரு கப், பொட்டுக்கடலை – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பால் – 3 கப், துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். அடி கனமான கடாயில் பால் ஊற்றி, நன்றாக காய்ச்சவும். பிறகு தீயைக் குறைத்து, பொடித்த அவல் – பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இறக்கும் சமயத்தில் துருவிய வெல்லம் சேர்த்துக் கலந்து இறக்கவும். வயதானவர் முதல் குழந்தைகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் கஞ்சியைத் தரலாம்.
குறிப்பு: சிவப்பு அவல்கூட பயன்படுத்தலாம். அவலில் மண் இருக்கும் என்பதால் நன்கு சுத்தம் செய்து உபயோகிக்கவும்.
உளுத்தங்கஞ்சி
தேவையானவை: முழு உளுந்து – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் – கால் கப் , ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ச்சி, ஆறவைத்த பால் – 2 கப்.செய்முறை: முழு உளுந்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதனுடன் நீர் சேர்த்து, குக்கரில் வேகவைத்து எடுத்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். பாலில் நாட்டு சர்க்கரை (அ) துருவிய வெல்லத்தைக் கரைத்து, மசித்த உளுந்தையும் போட்டு, அடுப்பில் வைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). இறக்கும்போது தேங்காய்த் துருவல், மாதுளை முத்துக்கள் தூவி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: இது, முதுகுவலியில் இருந்து நிவாரணம் தரும். பருவமடைந்த பெண்களுக்கு எலும்பு வலுவடைய இதை செய்து தருவார்கள். இனிப்பு சுவை வேண்டாம் என்றால்… ஏலக்காய்த்தூள், வெல்லத்துக்குப் பதில் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
கோதுமை ரவை கஞ்சி
தேவையானவை: கோதுமை ரவை – ஒரு கப், பயத்தம்பருப்பு – 50 கிராம், வறுத்த வேர்க்கடலை – 10 கிராம் (உடைத்துக்கொள்ளவும்), உருளைக்கிழங்கு – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப், நெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: வாணலியில் நெய் விட்டு கோதுமை ரவை, பயத்தம்பருப்பை தனித்தனியாக வறுக்கவும். பயத்தம்பருப்பை ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும். உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கி, தனியாக வைத்துக்கொள்ளவும். குக்கரில் 3 கப் நீர் விட்டு வறுத்த ரவை, பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிட்டு, இறக்கி… வேர்க்கடலை தூவி, சூடாக சாப்பிடவும்.
Re: 30 வகை சூப் - இரசம், கஞ்சி வகைகள்
Mon Jan 19, 2015 8:48 pm
ஜவ்வரிசி கஞ்சி
தேவையானவை: நைலான் ஜவ்வரிசி – அரை கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடைந்த மோர் – அரை கப், கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: ஜவ்வரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 1 (அ) 2 விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு, இறக்கிவைத்து… கடைந்த மோர், உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், வேகவைக்கும்போது உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டை நறுக்கி சேர்க்கலாம்.
பன்னீர் ரசம்
தேவையானவை: பன்னீர் – 3 டேபிள்ஸ்பூன், புளி – 15 கிராம் அளவு, சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, துவரம்பருப்பு நீர் – தேவையான அளவு (50 கிராம் துவரம்பருப்பை குக்கரில் வேகவிட்டு மத்தால் மசித்து நீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்), தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: சிறிதளவு தண்ணீரில் புளியை ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, சீரகத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து… புளிக் கரைசலை ஊற்றி, கொதிக்கவிடவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பருப்பு நீர் விட்டு சில நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் இறக்கி வைத்து பன்னீர் சேர்த்து, பாத்திரத்தை மூடிவிடவும்.
முருங்கைக் கீரை ரசம்
தேவையானவை: முருங்கைக் கீரை (ஆய்ந்தது) – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.அரைத்துக்கொள்ள: வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு.
செய்முறை: கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு வறுத்து, அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்). இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.
ஹெல்தி விட்டமின் கஞ்சி
தேவையானவை: கம்பு, கேழ்வரகு, பச்சைப்பயறு – தலா 50 கிராம், வேர்க்கடலை, புழுங்கலரிசி, பார்லி, ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, காய்ந்த சோள முத்து, கொள்ளு – தலா 25 கிராம், பாதாம், முந்திரி, ஏலக்காய் – தலா 4 (அனைத்தையும் பொறுமையாக குறைந்த தீயில் வெறும் கடாயில் தனித்தனியாக வறுக்கவும். ஆறவைத்து மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். அல்லது வீட்டில் மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நைஸாக அரைக்கவும். மாவை சலித்துக்கொள்ளவும். இதுதான் சத்து மாவு. இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துக்கொண்டால் வேண்டும்போது பயன்படுத்தலாம். இது, நீண்டநாள் கெடாது).செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் சத்துமாவுடன் ஒன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு கிளறி இறக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, கடைந்த தயிர் ஊற்றியும் சாப்பிடலாம். அல்லது பால் விட்டு வெல்லம், சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: அனைத்து தானியமும் விரும்பாதவர்கள் தேவையானதை மட்டும் வைத்து செய்யலாம்.
இன்ஸ்டன்ட் கஞ்சி
தேவையானவை: கார்ன் ஃப்ளேக்ஸ் மாவு – அரை கப் (கடையில் கார்ன்ஃப்ளேக்ஸ் ரெடிமேடாக கிடைக்கும். அதை மிக்ஸியில் பொடித்து, சலித்து எடுத்துக்கொள்ளவும்), தினை மாவு – கால் கப், பொடித்த பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.செய்முறை: கார்ன்ஃப்ளேக்ஸ் மாவு, தினை மாவை தேவையான அளவு நீரில் கரைத்து, அடுப்பில் வைத்து கிளறவும் வெந்த வாசனை வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு இறக்கி வைத்து, சூட்டுடனேயே பனங்கற்கண்டு சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு பரிமாறவும்.
பயறு கஞ்சி
தேவையானவை: முழு பச்சைப் பயறு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, பூண்டுப் பல் – 5, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – ஒரு டீஸ்பூன் (15 நிமிடம் ஊறவைக்கவும்) இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.Re: 30 வகை சூப் - இரசம், கஞ்சி வகைகள்
Mon Jan 19, 2015 8:49 pm
நெல்லிக்காய் ரசம்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 3, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, துவரம்பருப்பு வேகவைத்த நீர் – ஒரு கப்பொடி செய்ய: சீரகம் – ஒரு டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சீவிக்கொள்ளவும். இதனுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி – இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
குறிப்பு: நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது.
பத்திய ரசம்
தேவையானவை: புளி – நெல்லிக்காய் அளவு, மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: புளியை நேரடியாக அடுப்பு தணலில் காட்டி திருப்பி, திருப்பி சுட்டு அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் தயார் செய்யவும். மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். கடாயில் புளிக்கரைசல் விட்டு… உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகு – சீரகப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்த ரசத்தை ஊற்றிக் கலந்து சாப்பிடலாம். இதை பிரசவித்த பெண்களுக்குத் தருவார்கள். இதற்கு தாளிக்கக் கூடாது.
சாத்துக்குடி ரசம்
தேவையானவை: பாசிப்பருப்பு – 50 கிராம், சாத்துக்குடி – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – கால் அங்குலத் துண்டு, உப்பு – தேவைக்கேற்ப.தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து நீர் விட்டு… தோல் சீவி துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, பருப்புக் கலவை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி வைத்து, சாத்துக்குடியை பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: இந்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால், சத்தை இழந்துவிடும்.
பருப்பு உருண்டை ரசம்
தேவையானவை: புளித்தண்ணீர் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ரசப்பொடி – 2 டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, பூண்டுப் பல் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.உருண்டை செய்ய: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா அரை கப், சோம்பு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, உப்பு – சிறிதளவு.
செய்முறை: பருப்புகளை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழையை இதில் போட்டுக் கலந்து, உருண்டைகளாக பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் புளித்தண்ணீரை விட்டு, உப்பு, மஞ்சள்தூள், ரசப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து, பூண்டை நசுக்கிப் போட்டு கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் வெந்த பருப்பு உருண்டை சேர்த்து, மீண்டும் கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
புதினா – இஞ்சி ரசம்
தேவையானவை: புதினா (ஆய்ந்தது) – கால் கப், இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (10 கிராம்), மோர் – 3 கப், கடுகு, ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். பிறகு கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து, பாத்திரத்தில் உள்ள புதினா – மோர் கலவையில் சேர்க்கவும்.
குறிப்பு: மோர் கலவையை அடுப்பில் வைக்க வேண்டாம்.
Re: 30 வகை சூப் - இரசம், கஞ்சி வகைகள்
Mon Jan 19, 2015 8:50 pm
மிளகு – மல்லி ரசம்
தேவையானவை: மிளகு – 2 டீஸ்பூன், மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன், ரெடிமேட் ரசப்பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தக்காளி – ஒன்று, புளி – சிறிதளவு, வெல்லம் அல்லது சர்க்கரை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் – 2, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர்விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும். கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவந்தவுடன் இறக்கி, வெல்லம்
அல்லது சர்க்கரை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும்.
குறிப்பு: ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடிவிட்டால்… ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.
மோர் ரசம்
தேவையானவை: புளித்த தயிரை கடைந்த மோர் – 2 கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மோருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிவிட்டு நிறுத்தவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து மோரில் சேர்க்கவும். (விருப்பப்பட்டால் பெருங்காயத் தூளும் சேர்த்துக்கொள்ளலாம்).
வெங்காய ரசம்
தேவையானவை: நறுக்கிய வெங்காயம் – கால் கப், புளித்தண்ணீர் – 2 கப், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை: தனியா, இஞ்சித் துருவல், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் எண்ணெயில் வதக்கி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
- தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன் ஃபுட்டெகரேஷன்: `செஃப்’ ரஜினி
ஆச்சி கிச்சன் ராணி
வெஜ் மீட் பால்
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு டம்ளர், முட்டை – 2, சிக்கன் – 100 கிராம், காலிஃப்ளவர் பூ – அரை கப், ஆச்சி மஞ்சள்தூள் – சிறிதளவு, ஆச்சி மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், ஆச்சி பிரியாணி மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப, நெய் – சிறிதளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.செய்முறை: கோதுமை மாவுடன் சிறிதளவு நெய், உப்பு சேர்த்துக் கலந்து, வெதுவெதுப்பான நீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். காலிஃப்ளவரை வேகவைத்து சிறிதாக நறுக்கவும். சிக்கனை தனியாக வேகவைத்து பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து… வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு, 2 முட்டையை அடித்து ஊற்றி, ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் காலிஃப்ளவரை போட்டு வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கி, தண்ணீர் சுண்டியவுடன் ஆச்சி பிரியாணி மசாலா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கி, ஆறவிடவும்.
பூரி மாவை சின்ன வட்டங்களாக தேய்த்து, அவற்றில் வதக்கிய கலவையை சிறிதளவு வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum