தமிழர் வானியல்
Mon Mar 04, 2013 2:39 am
ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்களாக ஓரேயிடத்தில்
வாழ்ந்துவருகின்ற தமிழருக்கு வானியல் துறையில் இருந்த அறிவையும், அது பற்றி
அவர்கள் கொண்டிருந்த விளக்கங்களையும், அந்த அறிவை அவர்கள் பயன்படுத்திய
முறைகளையும் தமிழர் வானியல் என்னும் தலைப்பில் இக் கட்டுரை விளக்க
முயல்கிறது.
பண்டைக்காலத்தில், வானவியலுக்கு என்று தனியான
நூல்கள் எதுவும் தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் வாழ்க்கை
முறைகள் நம்பிக்கைகள் மற்றும் பிற அம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும்
மிகப்பழைய எழுத்துமூல ஆவணங்கள் சங்க நூல்களேயாகும். சங்கப் பாடல்களை
எழுதியவர்கள் பெரும்பாலும் சாதாரண புலவர்களே அவர்களிடம் வானியல் போன்ற
துறைகளின் நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்க முடியாது.
எனினும் வானியலோடு தொடர்புடைய, மக்கள் மட்டத்தில் புழங்கிய பல்வேறு
விடயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
வானிலே
உலாவருகின்ற பலவகையான பொருட்கள் பற்றி முற்காலத்தில் தமிழ் மக்களுக்கு
இருந்த அறிவு பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் மற்றும் சங்கம் மருவியகால
நூல்களிலே கிடைக்கின்றன. சூரியன், சந்திரன் ஆகியவை வானில் மிகத்
துலக்கமாகத் தெரிபவை. இயற்கையின் இயக்கத்தில் மிகத் தெளிவான பங்கு
வகிப்பவை. இதனால் இவற்றின் இருப்புப் பற்றிய அறிவும், அவற்றின் குணநலன்கள்
பற்றிய அறிவும் நீண்டகாலமாகவே தமிழ் மக்கள் மத்தியில் இருந்து
வந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. மிகமுந்திய தமிழ்
இலக்கியங்களிலே இவை பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன்
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற கோள்களைப் பற்றிய தகவல்களும்
இப்பாடல்களிலே காணப்படுகின்றன. செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர்.
மேலும் இக்கோளினை செம்மீன், அழல் எனப் புறநானூறும், பதிற்றுப்பத்தும்
குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனைப் படிமகன் என்ற பெயரில்
குறிப்பிட்டுள்ளது. புதிதாக கண்டறிந்தத கோள் புதன் என அழைக்கப்பட்டது...இதே
பரிபாடல் புதன் கோளைப் புந்தி என்ற பெயரிட்டு அழைக்கிறது. புதன் கோளுக்கு
அறிவன் என்ற பெயரும் உண்டு."வியா" என்றால் பெரிய என்ற பொருள்.
தேவர்களுக்குக் குரு என்று கருதப்பட்ட வியாழனைத் தமிழ்ப் பாடல்கள் அந்தணன்
என்கின்றன. சூரிய, சந்திரர்களுக்கு அடுத்தபடியாக வானிலே துலக்கமாகத்
தெரியும் வெள்ளி, பெரும்பாலும் வெள்ளியென்றே அழைக்கப்பட்டு வந்ததாயினும்
வெண்மீன், வைகுறுமீன், வெள்ளிமீன் போன்ற பெயர்களிலும் இது
குறிப்பிடப்படுவதைக் காணலாம்.இது வெண்மை நிறமுடையதால் வெள்ளி எனப்பட்டது.
சனிக்கோள் கருநிறம் பொருந்தியதாகக் கருதப்பட்டதனால் இது காரிக்கோள் எனவும்
மைம்மீன் எனவும் வழங்கப்பட்டது. இப்பெயர் புறநானூற்றுப் பாடலொன்றில் இடம்
பெற்றுள்ளது.
கோள்கள் என அழைக்கப்பட்ட மேற்காட்டியவற்றைவிட
பல்வேறு நட்சத்திரங்கள் பற்றியும், நட்சத்திரக் கூட்டங்கள் பற்றியும்
அக்காலத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.தானே ஒளி தருபவை "நாள்மீன்" என்றும்
சூரியனிடம் இருந்து ஒளியை பெறுபவை கோள்மீன் என்றும் அழைக்கப்பட்டன நாள்,
மீன் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்ட அவை பற்றிய குறிப்புக்களும்
பழந்தமிழ்ப் பாடல்களிலே உள்ளன. உரோகிணி, அருந்ததி, ஓணம் (திருவோணம்), ஆதிரை
(திருவாதிரை), கார்த்திகை, சப்தரிசி மண்டலம் என்பன பற்றியும் இவை தகவல்
தருகின்றன. இவற்றுள் கார்த்திகை அறுமீன் எனவும், சப்தரிசி மண்டலம், எழுமீன்
எனவும், அருந்ததி, வடமீன் எனவும் தமிழில் அழைக்கப்பட்டன. இவற்றோடு,
மகவெண்மீன் என மகமும், வேழம் எனப் பரணியும், முடப்பனையத்து நாள் என
அவிட்டமும் பாடல்களிலே இடம் பெறுகின்றன. அகத்தியன் என்று பெயரிடப்பட்டுள்ள
மீனைப் பரிபாடல் 'பொதியில் முனிவன்' எனக் குறிப்பிடுகிறது.
படம் :
கி.மு. 1500 க்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் சிலவற்றுக்கு அஸ்கோ
பர்போலா கொடுத்துள்ள ஊகத்தின் அடிப்படையிலான விளக்கங்கள்.
நன்றி: தமிழ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum