ரேபீஸ் பயங்கரம்!
Tue Nov 04, 2014 9:52 am
வெறிநாய் கடித்தால் ரேபீஸ் என்ற நோய் ஏற்படும். உயிரையே பறிக்கும் அபாயம் இதில் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தக் கொடிய ரேபீஸ் பற்றிய சில முக்கியமான தகவல்கள் பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
இதுபற்றி எஸ்.கே.எஸ். பிராணிகள் நல மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வி. அருண், கூறிய தகவல்கள் .
* உலக அளவில் இந்தியாவில் மட்டும் 50 சதவிகிதத்தினர் வெறிநோய் எனப்படும் ரேபீஸ் பாதித்து இறக்கின்றனர் என்கிறது முக்கியமான மருத்துவப் புள்ளிவிவரம். உலக அளவில் ரேபீஸ் நோய்க்கான எந்த தடுப்பு முறை திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருப்பதும் இந்தியாதான் என்கிறது அந்த ஆய்வு.
* ரேபீஸ் நோயைப் பரப்பும் வெறி நாய்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை நாய்களை பார்த்ததுமே அடையாளம் கண்டுகொள்ளமுடியும். பயங்கரமான முகத்துடன், வெறி பிடித்தது போல சுற்றி வந்து கண்ணில் தென்படுபவர்களை கடிக்கும். ஆனால், இரண்டாம் வகை நாய்கள், யாரிடமும் பழகாது அமைதியாக, இருளான அதேசமயம் தனிமையில் ஓர் ஓரத்தில் ஒதுங்கி இருக்கும். இந்த வகை நாய் கடித்தாலும் ரேபீஸ் வரும் வாய்ப்பு உண்டு. நம்மிடம் நன்றாகப் பழகும், சாதாரணமான வீட்டு நாயிடமும் ரேபீஸ் வைரஸ் இருக்க வாய்ப்பு உண்டு. (Carrier dogs). எனவே எந்த நாயாக இருந்தாலும் முறையாக ரேபீஸ் தடுப்பு ஊசி போட்டு, வளர்ப்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமான பாதுகாப்பு.
* ஒருவரை நாய் கடித்த 24 மணி நேரத்துக்குள் அவருக்கு தடுப்பு மருந்தை, ஊசி மூலம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு மேல் தாமததித்தால் மருந்தினால் அவ்வளவாகப் பலன் இருக்காது.
* பொதுவாக, நாய் கடித்ததுமே, முதலுதவியாக கடிபட்ட இடத்தை சோப் தண்ணீர் விட்டு நன்கு கழுவி விட்டாலே 75 சதவிகித ஆபத்து குறைந்துவிடும். மேலும், கடிபட்ட இடத்தில் கண்டிப்பாக பேண்ட் எய்டு, பேண்டேஜ், தையல் போடுவதை தவிர்ப்பது அவசியம். காயத்தைத் திறந்த நிலையில் விடவேண்டும். இவற்றைச் செய்தாலே, 90 சதவிகிதம் ஆபத்தைத் தாண்டிவிடலாம்.
ஊசிப் போடும்போது கவனிக்க...
* ரேபீஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டிப்பாக குளிர்சாதனப் பெட்டியில்தான் வைத்து பராமரிக்கவேண்டும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லும்போதும் குளிர்சாதனப் பெட்டியில்தான் எடுத்துச்செல்ல வேண்டும். இல்லையெனில் பலன் தராமல் போகலாம்.
* அதே போல, ஊசியைப் போடும் இடமும் மிகவும் முக்கியம். பலர், வழக்கமான ஊசியைப் போல, இதையும் பின்பக்க சதையில் போடுகின்றனர். ஆனால், இந்த ஊசியை கண்டிப்பாக, கைகளில் மேல்பக்க புஜங்கள் அல்லது உள்பக்க தொடையில்தான் போடவேண்டும். பின்பக்கத்தில் போடுவதால் எந்தவிதப் பலனும் இல்லாமல் போய்விடக் கூடும்.
- பிரேமா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum