ஒன்று என்பது ஏன் ஒரு கோடு போட்டது போல ஒரு வடிவத்தில் இருக்கிறது?
Tue Oct 07, 2014 9:05 am
ஒன்று என்பது ஏன் ஒரு கோடு போட்டது போல ஒரு வடிவத்தில் இருக்கிறது? அது ஏன் வேறு வடிவத்தில் இருந்திருக்க கூடாது?
இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்களா?
எண்கள் இல்லா காலம்
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களுக்கு ஒண்ணு, ரெண்டு, மூணு என எண்ண வேண்டிய தேவை ஏற்படவில்லை. சாப்பிட என்ன கிடைக்கும் என அலைவதே அவர்களுக்கு முழுநாள் வேலை.
வயிற்றுக்குப் போதுமானதாக இல்லாமல் இருந்தாலும் கிடைத்ததைச் சாப்பிட்டு, வாழ்ந்த காலம். அந்த காலம் வரைக்கும் மனிதர்களுக்கு எண்கள் தேவைப்படவில்லை. தேவைக்கும் மேலாக மிஞ்சிப்போனால்தான் கூடுதலாக இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்? அதற்கான அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், காலம் மெல்ல மாறியது.
கால்நடைகளை வளர்த்து தங்கள் பிடியில் வைத்துக்கொண்டால் அவற்றால் கிடைக்கும் பொருள்களைச் சேமித்து வைத்திருந்து சாப்பிடலாம் என மனிதர்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர். சேர்த்து வைத்துள்ள கால்நடைகளை எண்ணிப் பார்க்க வேண்டிய நெருக்கடி வந்தது.
எண்களின் பிரசவம்
அப்போது மனிதர்களின் மூளையிலிருந்து எண்கள் பிரசவமாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதரின் மூளையிலிருந்து கைவிரல்கள் வழியாக எண்கள் பிரசவமாகின.
கைவிரல்களைப் பயன் படுத்தித்தான் மனிதர்கள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பார்க்க தொடங்கி னார்கள்.
அதனால்தான் ஒன்று என்பது ஒரு விரலின் வடிவத்தில் இருக்கிறது.
குண்டக்க மண்டக்க கேட்கிற கேள்விகளுக்கு உள்ளேதான் விஞ்ஞானம் இருக்கிறது.
எழுதப் படிக்கத் தெரியாத பால்காரம்மாக்கள் இன்னமும் கூடப் பால்கணக்கைச் சுவரில் ஒத்தை ஒத்தை விரல்கள் மாதிரி கோடு கோடாகக் கீறி வைத்து கணக்கிட்டுப் பிறகு மொத்தமாகக் கூட்டிக் கணக்கு பார்ப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
பத்துக்களின் ஆரம்பம்
கையில் உள்ள பத்து விரல்கள்தான் உலகின் முதல் கால்குலேட்டர். பத்து வரைக்கும் எண்ணிப் பார்த்த பிறகு அடுத்து என்ன செய்யலாம் என முட்டிக்கொண்டு எண்கள் நின்றன.
ஆரம்ப எண்களைப் பிறந்த குழந்தையாக நினைத்துக் கொண்டால் 10- களின் ஆரம்பத்தை எண்களின் தவழும் காலகட்டமாக வைத்துக்கொள்ளலாம்.
பத்து விரல்களையும் எண்ணி முடித்த பிறகு ஒரு பத்துக்கு ஒரு கூழாங்கல் எனக் கற்களை வைத்து பழங்கால மனிதர்கள் கணக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினர். முதல் பத்து, இரண்டாவது பத்து, என எண்ணி எண்ணி பத்து பத்துக்கு நூறு எனப் பெயர் வைத்து எண்கள் மேலும் வளர்ச்சி அடைந்தன.
இன்னமும்..
ஆங்கிலத்தின் கால வழக்கில் ஒரு பத்தாண்டு என்று பேசப்படுவதை கவனியுங்கள். என்ன காரணத்தாலோ இந்திய கால வழக்கில் ஒரு பத்தாண்டு எனும் முறை ஆங்கில கால வழக்கு அளவுக்கு அவ்வளவு ஆதிக்கமாக இல்லை. ஆனால் பத்து பத்தாகக் கூட்டும் முறை இன்னமும் நவீன கார்கள் உள்ளிட்ட எல்லா தானியங்கி வாகனங்களிலும் தொடர்வதைப் பாருங்கள்.
அபாகஸ்
ஒரு பத்துக்கு ஒரு கல் என்று எடுத்து வைத்த முறைதான் ஒரு மரச்சட்டத்தில் கற்களுக்குப் பதிலாக மணிகளைக் கோத்து அவற்றைக் கொண்டு கணக்கிடும் அபாகஸ் மணிச்சட்டக் கருவியாக வளர்ந்தது.
ஒன்று எனும் எண்ணுக்கும் முன்பாகவும் பின்பாகவும் பல எண்களைக் கொண்ட பெரும் பிரபஞ்சமாய் கணிதம் வளர்வதற்கான மையமாக ஒன்று எனும் எண் நிற்கிறது. அதனைப் பெற்றெடுத்த விரலை நினைவுபடுத்தும் விதமாகவே ஒன்று விரலின் வடிவத்தில் இருக்கிறது.
The Indhu
Permissions in this forum:
You cannot reply to topics in this forum