குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது?
Sat Aug 16, 2014 1:52 pm
மூச்சை இழுத்துப் பிடித்து ஒரே மூச்சில் படித்து விடுங்கள். இதுதான் குண்டர் சட்டம் அல்லது குண்டாஸ் என்று அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர்.
1982-ல் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் கடந்த 32 ஆண்டுகளில் திருட்டு வீடியோ, நில அபகரிப்பு, மணல் கொள்ளை என ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு ஊதிப் பெருத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதனால் இந்த சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் தமிழ்நாடு சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திருத்தங்களின்படி முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் இந்த சட்டம் பிரயோகிக்கப்படலாம். இரண்டாவதாக, இணையம் மற்றும் பாலியல் குற்றங்கள் செய்பவர்களும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.
சமீப கால திட்டங்கள் அம்மா உணவகம், அம்மா நீர், அம்மா மருந்தகம், அம்மா பெட்டகம் என அழைக்கப்படுவ்வது போல இந்த சட்டத்தின் பெயர் “குண்டாஸ் சட்டம்” என்பதிலிருந்து “அம்மா சட்டம்” என்று மாற்றப்படுமா என்பது குறித்து அமைச்சர் எதுவும் சொல்லவில்லை.
குண்டர்கள் சட்டம் தடுப்புக் காவல் சட்டம் என்ற வகையில் வருகிறது. ஒருவர் குற்றம் செய்வதற்கு முன்பே, அவர் குற்றம் செய்வதை தடுக்கும் விதமாக அவரை சிறையில் அடைத்து வைப்பதுதான் இந்த குண்டர் சட்டத்தின் நோக்கம். இதுவரை இச்சட்டம் அடிக்கடி குற்றம் செய்பவர்களை தடுப்புக் காவலில் வைக்க பயன்படுத்தப்பட்டது. அடிக்கடி குற்றம் செய்பவர்கள் என்ற வரையறைக்குள் வருவதற்கு ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. காவல் நிலையத்தில் அவர் மீது 2-3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் போதும். தடையை மீறி நோட்டிஸ் கொடுத்தார், இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்தில் பேசினார் என்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியிருந்தால் கூட, அந்நபர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட தகுதி உடையவர் ஆகி விடுவார்.
இதன்படி சமூக வாழ்வில் உள்ள அனைத்து செயல்களையும் முதல் முறை குற்றம் செய்வோர் என்று காட்ட முடியும். சான்றாக நிர்வாகத்தை எதிர்த்து போராடும் தொழிலாளிகளைக் கூட வன்முறையாளர்கள் என்று முதல் முறை கைது செய்தாலே அடுத்த முறை குண்டர்கள் சட்டத்தின் படி உள்ளே தள்ள முடியும். முதல் முறையாக போராட்டத்தில் கைது செய்யப்படும் மாணவர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அனைவரையும் கூட இதில் கொண்டு வரும் சாத்தியம் இருக்கிறது. இதை விட என்ன அபாயம் இருக்கிறது?
இன்றைய சட்ட நடைமுறையின் படி, ஒரு காவலர் தெருவோரம் நிற்கிற ஒருவரை அழைத்துச் சென்று ஏதாவது வழக்கு பதிவு செய்து, அமர்வு நீதிபதி முன்பு நிறுத்தினால் அவர் கண்ணை மூடிக் கொண்டு 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டு விடுவார். அதன்பிறகு வக்கீல், முறையீடு, பிணைக்கு மனு செய்வது என்று சட்ட நடவடிக்கைகள் தொடரலாம். ஆனால், அப்படிப்பட்ட எந்த வசதியையும் பெற முடியாதவர்கள் 15 நாட்கள் வரை விசாரணை இல்லாமல் காவலில் வைக்கப்படலாம் என்பது நடைமுறை. எந்த ஒரு குடிமகனையும் 1 ஆண்டு வரை தடுப்புக் காவலில் வைக்கலாம் என்று காவல்துறையின் அதிகாரத்தை விரிவாக்குவதுதான் குண்டர் சட்டத்தின் நடைமுறை செயல்பாடாக உள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. கீழ் மட்ட காவல் நிலையங்களில் தயாரித்து அனுப்பப்படும் உத்தரவுக்கு அவர்கள் ஒப்புதல் வழங்குவது நடைமுறையாக உள்ளது. அல்லது மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுக்கேற்ப தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கிறார்கள். இந்த ஆணையின் படி சம்பந்தப்பட்ட நபர் 1 ஆண்டு வரை சிறையில் அடைக்கப்படுவார். 1 ஆண்டு வரை அவர் மீது எந்த விதமான நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டியதில்லை.
கைது செய்யப்பட்டவர், தான் நிரபராதி அல்லது இந்த சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்று முறையீடு செய்ய ஒரு மேல் முறையீட்டு குழு உள்ளது. அதில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி பங்கேற்பார்கள். அந்தக் குழுவின் முன்பு கைது செய்யப்பட்டவர் நேரில் முறையிடலாம். ஆனால், அவர் சார்பாக குழுவின் முன்பு எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக முடியாது. வழக்கறிஞர் அல்லாத நண்பர்கள் அல்லது உறவினர்கள் அவர் சார்பில் பேசலாம். இந்த நடைமுறையில் 100-க்கு 99 வழக்குகளில் பாதிக்கப்படவரின் முறையீடு நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்தக் குழு ஒரு நிர்வாக விசாரணைக் குழு என்பதால் வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, எந்த நீதிமன்ற தலையீடும் இல்லாமல் ஒரு தனிநபரை 1 ஆண்டு வரை அடைத்து வைக்கும் உரிமையை நிர்வாகத்துக்கு வழங்குகிறது இந்தச் சட்டம். சொல்லிக் கொள்ளப்படும் தனிநபர் சுதந்திரம் என்பதை அப்பட்டமாக பறிக்கும் நடவடிக்கையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முறையீட்டுக் குழுவில் நிராகரிக்கப்பட்ட பிறகு, கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு போடலாம். கீழமை நீதிமன்றங்களை அணுக முடியாது. உயர்நீதிமன்றம் இந்த கைது உத்தரவை ரத்து செய்தால் அவர் வெளியில் வந்து விடலாம். அரசுத் தரப்பு, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், உயர்நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்குள் பல மாதங்கள் வரை நீட்டித்து விடுகிறது. காவல்துறை முறையாக கவனிக்கப்பட்டால், அரசு வழக்கறிஞர் எதிர்ப்பை வலுவாக முன் வைக்காமல் விரைவில் வெளியில் வர முடியும். காவல் துறையை கவனிக்கும் வசதி உடையவர்களுக்கு இந்த வசதி இருக்கிறது. மற்றவர்கள் நடைமுறையில் 6 மாதம் முதல் 8 மாதங்களுக்குப் பிறகே இந்த வகையில் விடுவிக்கப்படுவது நடக்கிறது.
இது வரையிலான நடைமுறையில் 5% தடுப்புக் காவல் உத்தரவுகள்தான் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், எஞ்சிய 95% வழக்குகளில் தடுப்புக்காவல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதற்கு முன் கைது செய்யப்பட்ட நபர் 6 முதல் 8 மாதங்கள் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு விடுகிறார்.
இவ்வாறாக, இந்த சட்டம் காவல்துறை மிரட்டி பணம் பறிப்பதற்கான ஒரு ஊழல் சட்டமாகவும், ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் தமக்கு எதிரான கருத்துக்களை அடக்குவதற்கான அடக்குமுறை சட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது.
இந்த சட்டம் 1980-களில் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மாநிலங்களால் இயற்றப்பட்டது. இது போன்ற கடுமையான சட்டங்கள் மகாராஷ்டிரா அமைப்பாக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டம், சத்தீஸ்கர் பயங்கரவாத தடுப்புச் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டங்கள் தனிநபர் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியல் சட்டத்துக்கு முரணானவை அல்ல என்று நீதிமன்றங்கள் உட்பட இந்திய ஆளும் வர்க்க அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதை இன்னும் சர்வாதிகார விதிகளுடன் சேர்த்து கொண்டு வரப்பட்டவையே தடா, பொடா சட்டங்கள். ரத்து செய்யப்பட்ட அந்த சட்டங்களை இன்னும் கடுமையாக மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பது பாஜகவின் திட்டம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை குண்டர்கள் சட்டம் பொதுவில் ரவுடிகளை கைது செய்து முடக்கத்தானே பயன்படுகிறது என்று சிலர் கேட்கலாம். அதிலும் ஏகப்பட்ட உள்குத்துக்கள் இருக்கின்றது. அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதை வைத்து ஜெயா அரசை கண்டிக்கும் தைரியம் இந்த ஊடக சூரப்புலிகளுக்கு இல்லை என்றாலும் மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள் மாதிரி ஒரு கருத்து வெளியிட்டாலே போதும். அதிகார வர்க்கம், போலீசு, உளவுத்துறை, கிச்சன் கேபினட் மூலம் ஆட்சி செய்யும் ஜெயாவிற்கு நல்ல செய்திகள் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வருகிறது.
உடனே காவல் துறை ஆணையர்கள் உள்ளூர் அளவில் இலக்கு கொடுப்பார்கள். அது இறுதியில் ஒரு காவல் நிலையம் ஒரு மாதத்திற்குள் ஐந்து பேரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்து ‘ரிசல்ட்’ காட்ட வேண்டும் என்று அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக இதே காவல் நிலையங்கள் மாதத்திற்கு இத்தனை வழக்குகள் போட வேண்டும் என்று அமல்படுத்தி வருகிறார்கள். அதனால் சிறு குற்றங்கள் செய்வோரும், அப்படி செய்து பின்னர் திருந்தி வாழ்பவர்களும், குற்றமேதும் செய்யாத பாதையோர, சிறு வணிகர்கள், தள்ளு வண்டிகாரர்களை சந்தேக கேஸ் என்று காவல்துறை கைது செய்து சிறையலடைப்பது வழக்கம். இதுவேதான் குண்டர்கள் சட்டத்திலும் சற்று மேம்பட்ட அளவில் செயல்படுகிறது.
அதாவது கீழ்மட்ட போலிசிலிருந்து, ஆணையர், அமைச்சர், ஆளும் கட்சி வரை முரண்படும் நபர்களை கைது செய்வார்கள். அது இல்லாத போது சிறு அளவு குற்றவாளிகளை உள்ளே தள்ளுவார்கள். அத்தகைய ‘புகழ்’ வாய்ந்த சட்டத்தில்தான் தற்போது இரண்டு திருத்தங்களை சேர்த்திருக்கிறார்கள்.
பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாக ஜெயா அரசு கூறுகிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் இருக்கும் போது, இதற்கு என்ன அவசியம்? குற்றம் நடக்கும் முன்னே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பழையை நடத்தையை வைத்து கைது செய்யும் நடைமுறை இங்கே எப்படி நடைமுறைப்படுத்தப்படும்? அப்படிப் பார்த்தால் பெண்களை ஆபாசமாக சித்தரித்து, பாலியல் உணர்வை வெறியாக கட்டியமைக்கும் ஊடகங்கள், தொலைக்காட்சிகள், விளம்பரங்கள், சினிமாத் துறை நபர்களை கைது செய்வார்களா? மாட்டார்கள். தமிழகத்தில் அதிகம் பாலியல் வன்முறை நடக்கும் இடங்கள் என்ற முறையில் கண்காணிக்கப்பட வேண்டிய காவல் நிலையங்களில் உள்ள குற்றவாளி போலீசுக்காரர்களையும் இந்த சட்டப்படி கைது செய்வார்களா? மாட்டார்கள்.
மேலும் அமுலில் உள்ள குண்டர் சட்டப்படியே கூட மணற்கொள்ளையர்கள், கிரானைட் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என எவரும் கைது செய்யப்பட்டதில்லை. வைகுண்டராஜன் போன்றோர் எந்த தடையுமின்றி தொழிலை தொடர்வதே இதற்கு சாட்சி.
இணைய குற்றங்களையும் குண்டர்கள் சட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தனக்கு எதிரான கருத்துக்களை முடக்குவதற்கான தயாரிப்புகளை ஜெயா அரசு செய்து முடித்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66A பிரிவு பேஸ்புக்கில் நிலைத்தகவல் இட்டவர்கள், கேலிச்சித்திரத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள் என்று ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை ஒடுக்குவதற்கு பல முறை தவறாக பயன்படுத்தப்பட்ட இழிபுகழ் கொண்டது. ஜெயா அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திருத்தமும் பொதுவான பொருளில் இருந்தாலும் அதில் இணையம் தொடர்பான எதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இணையத்தில் நடக்கும் பொருளாதாரக் குற்றங்கள், ஏமாற்று மோசடிகள், பாலியல் பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்கனவே போலீசு துறை அதிகம் விசாரித்துத்தான் வருகிறது. சைபர் கிரைமின் முக்கியமான வேலையாகவே இக்குற்றங்கள் இருக்கின்றன. ஆனால் கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம். இதில் எல்லாரையும் தனிநபர்களாக கைது செய்வது முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம்.
அது ஒரு பிரச்சினையே இல்லை. ஜெயாவை கண்டித்து ஒருவர் கார்ட்டூன் போட்டதை, மம்தா பானர்ஜி போல கைது செய்து உள்ளே தள்ளினால் பிறகு யார் கார்ட்டூன் போடுவார்கள்? தற்போதே தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் எதிர்த்து ஜெயா அவதூறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார். அப்படி தொடர்வதற்கு முன்னாடியே இதே ஊடகங்கள் தமிழக அரசு குறித்து மிகுந்த எச்சரிக்கையாவே எழுதிவருகின்றன. அது மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு தொடங்கி புரசைவாக்கம் குமுதம் வரை முதுகெலும்பு இல்லாத ஊடக அறமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தில் காத்திரமாக எழுதும் தனிநபர்களையோ இல்லை தளங்களையோ இப்படி ஒரிருவரை ‘கவனித்தாலே’ போதுமானது. மற்றவர்கள் வாய் மூடிக் கொள்வார்கள். அப்படி நடக்காது எனுமளவுக்கு தமிழகத்தின் அரசியல் சூழல் ஆரோக்கியமாக இல்லை.
இறுதியில் புரட்சிகர, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை முடக்குவதற்கே இத்திருத்தம் பயன்படும். இன்றைக்கு உடனே இத்திருத்தம் பயன்படாமல் போனாலும் என்றைக்கும் நம் கழுத்தின் மீது தொங்கும் கத்தியாகவே இருக்கும். தேவைப்படும்போது கத்தி கீழே இறங்கி கருத்து சுதந்திரத்தை அறுத்து விடும்.
இனிமேல், இந்த சட்டம் முறையாக “தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், இணையக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம 1982” என்று அழைக்கப்பட வேண்டும்.
நாட்டில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்புக் காவலில் அடைப்பதுதான் ஜெயா அரசு முன் வைக்கும் வழிமுறை. அதே நேரம் இந்தியாவிலேயே அரசியல் போராட்டம் அதிகம் நடக்கும் மாநிலமான தமிழகம் பாசிச ஜெயா அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடும். போராட வேண்டும்.
- செழியன்.
நன்றி: வினவு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum