நாங்க விவசாயம் படிச்சாலும்,
Sat May 17, 2014 8:55 pm
நாங்க விவசாயம் படிச்சாலும், 'வி சாட்’லயும் இருப்போம்!’' என்று சிரிக்கிறார்கள்... பெரியகுளம், தோட்டக்கலைத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள்! விவசாயம் பற்றி, வற்றாமல் பேசுபவர்களிடம் 'சாட்’டியதில் இருந்து!
''நாங்க பி.எஸ்சி., தோட்டக்கலைத்துறை (Horticulture) படிப்பில் சேர்ந்தப்போ, எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'உலகம் எங்கயோ போயிட்டிருக்கு... நீங்க என்னடானா தோட்டம், செடி, வயல், வரப்புனு படிக்க கிளம்பிட்டீங்களே’னு சிரிச்சாங்க. என்ன பண்றது... 'குட்மார்னிங்'னு தன்னிச்சையா சொல்ற நம்ம மக்களுக்கு, 'வணக்கம்' சொல்ல மட்டும் வர்றதில்ல. இப்போ பாதுக்காக்கப்பட வேண்டிய விஷயங்கள் ரெண்டு. ஒண்ணு... மொழி, அடுத்தது... விவசாயம். அதனாலதான் நாங்க விவசாயம் படிக்க முடிவெடுத்தோம். வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை வரும்போதுதான் தெரியப்போகுது... விவசாயம் படிச்சவங்களுக்குக் கிடைக்கப்போற மவுசு'' என்று பெருமையாகச் சொன்ன சௌமியாவைத் தொடர்ந்தார், யாமினி...
''எங்க படிப்புல ஒரு செமஸ்டர் முழுக்க ஒரு கிராமத்துல தங்கி விவசாயிகள்கிட்ட பாடம் படிக்கணும். அந்த வகையில, அவங்களோட சேர்ந்து தோப்புக்குப் போறது, தோட்ட வேலை பார்க்கறது, உழுறது, வாய்க்கால் வரப்பு வெட்டுறது, விதைகளை நடுறது, தண்ணி பாய்ச்சுறது, களையெடுக்குறதுனு எல்லாத்தையும் கத்துக்கிட்டிருக்கோம் தெரியும்ல'' என்று யாமினி சொல்ல...
''இப்பவே எங்களுக்கு விவசாயம் அத்துப்படி. எங்ககிட்ட ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்துப் பாருங்க... வெள்ளாமை குலுங்கும். அப்படித்தான் எங்க காலேஜ்ல எங்களுக்கு ஒதுக்கின ஒரு ஏக்கர் நிலத்தில், 75 மாணவர்களும் சேர்ந்து விவசாயம் பார்த்தோம். தளதளனு தக்காளியை விளைவிச்சு எடுத்து, அப்படியே காலேஜ் ஹாஸ்டலுக்கு கொடுத்துட்டோம். இதையெல்லாம் வேறவேற காலேஜ்ல படிக்கற எங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, 'அய்யோ... எங்க படிப்பு எல்லாம் ஒரே போர். நாங்களும் அக்ரியே படிச்சுருக்கலாம்!’னு ஏங்குறாங்க!'' என்று சந்தோஷப்பட்டார் சௌமியா.
''விவசாயக் குடும்பப் பொண்ணுங்க, ஒரு ஐடியாவோட அக்ரி படிப்புகளை படிப்பாங்க. அவங்களுக்கு படிப்பில் பெரிய ஆச்சர்யங்கள் அவ்வளவா இருக்காது. ஆனா, 'அரிசிச் செடி எப்படி இருக்கும்?’னு கேட்கற அளவுக்கு விவசாயத்தில் இருந்து தூரமா வளர்ந்த பொண்ணுங்க இந்தப் படிப்பில் சேரும்போது, ஒவ்வொரு விஷயமும் அதிசய ஆச்சர்யமா இருக்கும். அப்படித்தான் எனக்கும் இருந்துச்சு.
காலையில எழுந்ததும் வயல் வரப்புல நடக்கற சுகமே தனி. ஆரம்பத்துல விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. போகப் போக பழகிடுச்சு. இப்போ நான் ஒரு அக்மார்க் விவசாயினி!'' என்று சிரித்தார் வினோதினி!
''ஆர்ட்ஸ், சயின்ஸ், இன்ஜினீயரிங், மெடிக்கல்னு படிக்கறவங்களுக்கு ஆறேழு மணி நேரம் கிளாஸ்ரூம்லயே கிடக்குறது எவ்வளவு கடுப்பா இருக்கும்? ஆனா, நாங்க ரெண்டு மணி நேரம் மட்டும்தான் கிளாஸ் ரூம்ல இருப்போம்... நாலு மணி நேரம் வயல்காடுதான். செம்மல்ல! தொட்டி ரோஸ் வாங்கிட்டுப் போய் அதுக்குத் தண்ணி ஊத்தத் தெரியாம இருந்தவதான் நான். இப்போ, செடிகளை இயற்கை எருவும் மணலும் கலந்து அடைச்ச பாக்கெட்ல ஊன்றி, அல்லது விதைகளை இட்டு, தேவையான ஊட்டச்சத்தைக் கொடுத்து, வீட்டுல புதுசா பிறந்த பாப்பா மாதிரி கண்ணும் கருத்துமா பார்த்து வளர்த்து, அதை எடுத்துட்டுப் போய் நிலத்துல அதுங்களோட இனத்துகூட சேர்க்கறதுனு... கலக்கிக்கிட்டிருக்கேன். பாடப்புத்தகத்தை வெச்சுக்கிட்டு முட்டி முட்டி 'மக்’ அடிக்கற வேலை, இங்க இல்லவே இல்லை!''னு சிலிர்ப்போட சொன்னாங்க தமிழோவியா.
''இவங்கதான் எங்க தலைமை விவசாயி...!'' என்று மகேஸ்வரியும் அபிநயாவும் தெய்வானையை அறிமுகப்படுத்த...
''நான் விவசாயக் குடும்பத்துப் பொண்ணு. அதனால வாய்க்கா வரப்பிலிருந்து... பாத்தி கட்டுறது வரை எல்லாம் லாகவமா செய்வேன். எந்தப் பட்டத்துல என்ன விதைக்கணும்னு சொல்ற அளவுக்கு விவசாயம் கத்துக்கிட்டாச்சு. 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் அய்யாவுக்கு, அடுத்த தலைமுறை விவசாயத்தை காப்பாத்தணும்ங்கிறது பெருங்கனவு.
இந்தப் படிப்பு மூலமா அதை நாங்க நிறைவேத்துவோம். மண்ணோட வளத்தைக் கெடுக்கக்கூடாது, இயற்கை விவசாயத்தை பரவலா செயல்படுத்தணும்... எதிர்காலத்தில் இந்த உறுதியில் இருந்து தவறாம உழைப்போம்!'' என்று சீரியஸாகப் பேசியவர்,
''ம்ம்ம்... எல்லாரும் மண்வெட்டியை எடுத்து வரப்பு போடுங்க...'' என்றழைக்க, சுறுசுறுப்பானது தோட்டம்!..
- விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum