இரட்சிப்பு ...
Fri Sep 06, 2013 10:00 pm
ஒரு வாலிபனைச் சந்தித்த ஒரு கிறிஸ்தவ ஊழியர் அந்த வாலிபனைப் பார்த்து “நீ இரட்சிக்கப்பட்டு விட்டாயா?” எனக் கேட்டார். அதற்கு அவன் “இரட்சிக்கப்படுவதென்றால் என்ன” எனக் கேட்டான். அதற்கு அந்த ஊழியர் “நீ இயேசுவை உன் இரட்சகராக ஏற்றுக் கொண்டு உன் பாவங்களை உணர்ந்து அதைத் தேவனிடத்தில் அறிக்கை செய்து முழுவதுமாக விட்டுவிடுவாயானால் நீ இரட்சிக்கப்படுவாய்” எனக் கூறினார். அதற்கு அந்த வாலிபன் “எல்லோரும் இவ்வாறு இரட்சிக்கப்படுவார்களா?” எனக் கேட்டான். ஊழியரோ “இரட்சிப்பைப் பற்றி உணர்ந்தவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். சிலர் தம்முடைய முதிர் வயதிலும் தம்முடைய மரணத் தருவாயிலும் கூட இரட்சிக்கப்படுகிறார்கள்.” எனக் கூறினார்.
அதைக் கேட்டு உற்சாகமான வாலிபன் “அப்படியானால் நான் இப்பொழுது இரட்சிக்கப்பட வேண்டும் எனும் அவசியமில்லையே! இப்பொழுது நான் என் இஷ்டப்படி வாழ்வேன். என் முதற் வயதில் எனக்கு மரணம் சம்பவிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்னர் என் பாவங்களை அறிக்கை செய்து இயேசுவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்படுவேன்.” எனக் கூறினான்.
அதற்கு அந்த ஊழியர், ” நீ எப்பொழுது மரிப்பாய் என உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டார். அதை கேட்ட வாலிபன் மிகவும் அதிர்ந்தவனாக காணப்பட்டான். ஆம்! நாம் எவ்வளவோ தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களை பிழை என்று தெரிந்தும் சில தெரியாமலும் செய்கிறோம். உள்ளத்தில் உணராதவர்களாக சிலவற்றை பின்பு தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்டு கொள்ளலாம் என்ற எண்ணத்துடனும் செய்கிறோம். நாம் இப்பூமியில் வாழப் படைக்கப்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய மரணம் எப்பொழுது என நமக்குத் தெரியாது. “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே”(புலம்பல் 3:22) என்ற வாக்கின் படி அவருடைய கிருபை தான் எம்மை நடத்துகிறதாகவும் காணப்படுகிறது.
இதை உணர்ந்தவர்களாக நாம் அவருக்கு எப்பொழுதும் பிரியமான காரியங்களைச் செய்வோமானால், அவர் எம்மை எல்லாவற்றிலும் காக்கிறவராக இருப்பார்.
“நீங்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”
நன்றி: வாலிபன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum