கடவுள் நித்தியமானவர்
Thu Aug 22, 2013 11:32 pm
1. கடவுள் என்றால் என்ன?
கடவுள் ஆவியானவர், அளவில்லாதவர், நித்தியமானவர், அவருடைய தன்மையிலும்,ஞானத்திலும், வல்லமையிலும், பரிசுத்தத்திலும், நியாயத்திலும், நன்மைகளிலும் மற்றும் சத்தியத்திலும் மாறாதவர்.
உபாகமம் 33:27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
சங்கீதம் 90:2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
சங்கிதம் 102:12, 24-27 12. கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். 24. அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 25. நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. 26. அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். 27. நீரோ மாறாதவராயிருக்கிறீர்;உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
வெளி 1:4, 8 4. யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், 8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
2. கடவுள் நித்தியமானவர் என்றால் என்ன?
கடவுள் நித்தியமானவர் என்றால் அவர் துவக்கமும் முடிவும் இல்லாதவர் என்று அர்த்தம். அவர் என்றும் இருக்கிறவர், அவர் என்றைக்கும் இருந்தவர், அவர் என்றைக்கும் இருப்பார். எல்லாவற்றையும் படைத்தவர் அவர், எல்லாவற்றையும் படைக்கும் முன்னமே அவர் இருந்தார், “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” (சங்கீதம் 90:2).அவருடைய பெயர் அல்லது அவருடைய நாமம் என்ன என்ற மோசேயினுடைய கேள்விக்கு பதில், நான் “இருக்கிறவராக இருக்கிறேன்” (யாத்திராகமம் 3:14) என்பதே. யேகோவா என்கிற அவருடைய நாமத்தின் சொல் தான் “இருக்கிறவராக இருக்கிறேன்” என்பதாகும்.
3. கடவுளுடைய நித்தியத்திற்கும் தூதர்கள் மற்றும் மனிதர்களுடைய ஆத்துமாவின் நித்தியத்திற்கும் என்ன வேறுபாடு உண்டு?
முதலாவது, தூதர்கள் மற்றும் மனிதர்களுடைய ஆத்துமாவிற்கு முடிவு கிடையாது என்றாலும் அதற்கு ஒரு ஆரம்பம் இருந்த்து. ஆனால் கடவுளுக்கு துவக்கம் கிடையாது, அவர் நித்திய காலத்திற்கும் இருக்கிறவர்.
இரண்டாவது, நம்முடைய நித்தியம் கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு. நாம் நித்தியமாக இருக்க நமக்கு சக்தி கிடையாது. ஆனால் அவர் தம்முடைய நித்தியத்தை யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை. அவருடைய தன்மை அப்படிப்பட்டது. சூரியனுடைய தன்மை வெப்பம் வெளிச்சம் என்பதைப் போலவே அவர் நித்தியமானவர்.
4. எந்த விதத்தில் உடன்படிக்கையானது நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்படுகிறது?
கடவுளுடைய உடன்படிக்கையானது அவருடைய நித்தியத் தன்மையினால் நித்திய கிருபைகளைக் கொண்டது. உடன்படிக்கையிலே விசுவாசிகளுக்கு அருளப்பட்ட மன்னிப்பு, சமாதானம் மற்றும் இரட்சிப்பு எல்லாம் முடிவில்லாத கருணைகளாகும். அவைகள் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது கிடையாது, கடவுளுடைய நித்திய தன்மையினால் நமக்கு அவர் கொடுத்துள்ள நித்திய கிருபையின் உடன்படிக்கையாகும். ஆகவே தான் நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்படுகிறது (2 சாமுவேல் 23:5).
5. எந்த விதத்தில் சுவிசேஷமானது நித்திய சுவிசேஷம் என்று சொல்லப்படுகிறது?
சுவிசேஷம் நித்தியமானது ஏனென்றால் சுவிசேஷத்தினால் உயிர் பெற்ற நம்முடைய ஆத்துமாவில் செய்யப்படும் செயல்கள் நித்தியமானவை. ஆத்துமா நித்திய காலத்திற்கும் பரிசுத்தமாக்கப்படும். நாம் நித்திய சுவிசேஷத்தை உடையவர்கள் (வெளி 14:6)
6. எந்த விதத்தில் கிறிஸ்துவின் மீட்பானது நித்திய மீட்பு என்று சொல்லப்படுகிறது?
கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்படுகிறவர்களுக்கு எந்தக் காலத்திலும் ஆக்கினைக்குரிய தீர்ப்பு கிடையாது, “வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபிரேயர் 9:12). எல்லாரும் நித்திய காலத்திற்கும் மரணத்திலிருந்து ஜீவனுக்கு மீட்கப்படுகிறார்கள், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 5:24).
7. எந்த விதத்தில் கிறிஸ்துவின் இறுதி நியாயத்தீர்ப்பானது நித்திய நியாயத்தீர்ப்பு என்று சொல்லப்படுகிறது?
இறுதி நியாயத்தீர்ப்பின் விளைவுகள் நித்திய காலத்திற்கு இருக்கும். மனிதர்களுடைய ஆத்துமாவின் நிலை கடவுளோடு நித்திய சந்தோஷத்தில் களிகூரும் அல்லது நரகத்தில் நித்திய வேதனையோடு தவிக்கும். ஆகவே தான் இறுதி நியாயத்தீர்ப்பானது நித்திய நியாயத்தீர்ப்பு என்று சொல்லப்படுகிறது (எபிரேயர் 6:2).
8. கடவுளுடைய நித்திய தன்மையிலிருந்து பொல்லாத மனிதர்கள் அறிந்துகொள்ளவேண்டியது என்ன?
பொல்லாத மனிதர்கள், தாங்கள் செய்யும் பொல்லாத காரியங்களை எதிர்த்து பழி வாங்கி நித்திய காலத்திற்கும் தண்டனை கொடுக்க ஒரு நித்திய கடவுள் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளவேண்டும், “அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்” (2 தெசலோனிக்கேயர் 1:10).
9. கடவுளுடைய நித்திய தன்மையிலிருந்து அவருடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டியது என்ன?
அவருடைய இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்ட, விசுவாசிகளாகிய பரிசுத்தவான்கள், நித்திய கடவுளை தங்களுடைய நித்திய சந்தோஷமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் அவர்களுடைய ஆனந்தத்திற்கும் அளவே இல்லை, “உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்கீதம் 16:11).
10. கடவுளுடைய நித்திய தன்மையிலிருந்து எல்லாரும் அறிந்துகொள்ளவேண்டியது என்ன?
முதலாவது, நம்முடைய வாழ்க்கை கடவுளோடு ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை என்பதே, “இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்” (சங்கீதம் 39:5).
இரண்டாவது, நம்முடைய பாவங்கள் கடமைகள் எல்லாம் நித்திய கடவுளுக்கு முன் செய்யப்பட்டது என்பதே. ஏதோ ஒரு காலத்தில் செய்யப்பட்டது என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. அவை எல்லாம் நித்திய கடவுளுக்கு முன்பாக செய்யப்பட்டதே.
மூன்றாவது, கடவுளுக்கு தம்முடைய காரியங்களைச் செய்ய எல்லா காலமும் அவர் கைகளில் இருக்கிறது. பிசாசினுடைய காலம் கொஞ்சம் தான் (வெளி 12:12), ஆனால் கடவுளுடைய கைகளில் நித்திய காலமும் இருக்கிறது. அவர் “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்” (வெளி 1:.
நன்றி: கிறிஸ்துவின் மகிமை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum