எக்ஸ் ரே - X Ray
Thu Aug 01, 2013 3:20 pm
============
நாம் கீழே வழுக்கி விழுந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தில் அடிபட்டுவிட்டாலோ மருத்துவரிடம் செல்வோம். அப்போது, நம்மைப் பரிசோதிக்கும் மருத்துவர், உள்ளே உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய எக்ஸ் ரே எடுத்து வரச் சொல்வார். நமது உடம்பின் உள்ளே ஊடுருவிச் செல்லும் கதிர்கள் அடிபட்ட தன்மையினைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
இன்றைய மருத்துவ உலகில் நோயின் தன்மையை அறியப் பெரிதும் பயன்படக் கூடியதே எக்ஸ் ரே கதிரியக்க முறை. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இக்கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன. மருத்துவ உலகிற்கு மட்டுமல்லாமல், உயர்ந்த ஆபரணங்களை மறைத்துவைத்துக் கடத்துவதைக் கண்டுபிடிப் பதற்கும், இயற்கை வைரத்தைச் செயற்கை வைரத்திலிருந்து கண்டுபிடிப்பதற்கும், பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்குமான பல செயல்களில் இக்கதிர்கள் பயன்படுகின்றன. இந்த எக்ஸ் ரே முறையினைக் கண்டுபிடித் தவர் ஜெர்மனியில் 1845, மார்ச் 22 இல் லௌனப் என்ற இடத்தில் பிறந்த வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென் என்பவர். இவரது தந்தை விவசாயி. 1885 இல் விர்ஸ்பொர் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
தனது ஆய்வுக்கூடத்தில் சில வாயுக்களை வைத்து சோதனை செய்தார். வாயுக்களிலிருந்து வெளிப்படும் மின்சாரம்பற்றிய ஆராய்ச்சியைச் செய்து பார்த்தார். இந்த ஆய்வை, ஒரு கேத்தோடு குழாயை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது. கருப்புக் காகிதத்தால் கேத்தோடு குழாயையும் மூடி வைத்திருந்தார். அந்தக் குழாய்க்கு அருகிலிருந்த பிளாட்டிளா சையனைட் படிகம் வெளிச்சம்பட்டு மின்னியுள்ளது. ஆச்சரியத்தில் மூழ்கினார்.
குழாயிலிருந்து ஏதோ கதிர் ஒன்று வெளிப்பட்டு குழாயை மீறி, மூடி வைத்திருந்த கருப்புக் காகிதத்தையும் தாண்டி வந்திருக்க வேண்டும் எனக் கணித்தார். கண்களுக்குப் புலப்படாதவையாக இருந்த இந்தக் கதிர்கள் அதுவரையிலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படாததால் எக்ஸ் ரே எனப் பெயர் வைத்தார்.
எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால் இவர் கண்டுபிடித்த கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார். எனவே, இக்கதிர்களை போட்டோ தகட்டில் வைத்திருந்த மனைவி கை மீது செலுத்திப் பார்த்தார். செலுத்தியபின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார்.
அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன. 1895 இல் - தனது 50 ஆவது வயதில் இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.
இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901 இல் உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால் உடலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாகும். ராண்ட்ஜென் மற்றும் அவருடன் ஆராய்ச்சி செய்தவர்கள் எக்ஸ் ரே கதிர்களின் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளனர்.
via Ravi Lochanan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum