இயற்கை பேரழிவுகளுக்கான காரணம்
Tue Jul 16, 2013 5:51 am
"சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை" (எசே18:32) என்றே கர்த்தர் சொல்லுகிறார் .
தேவன் ஆதாமுக்காக படைத்த பூமியானது அழிவை அறியாத சொர்க்கபூமியாகவே இருந்தது. அதை ஆண்டுகொள்ளும்படியான முழு அதிகாரத்தையும் கொடுத்து தேவன் மனிதனை அதில் வைத்தார். இயற்கைக்கு ஒத்த வாழ்வை நாம் வாழ்ந்தோமானால் இயற்கை என்றும் நமது நண்பனே! ஆனால் இன்றைய இயற்கை பேரழிவுகளும் அதனால் ஏற்படும் உயிர்சேதங்களும் பெரும்பாலும் மனித தவறுகளால் ஏற்படுகிறது என்பதே உண்மை. நாம் நமது சுயநல வியாபாரங்களுக்காக இயற்கையை அழித்தோம் அதன் விளைவை அறுவடை செய்கிறோம் இன்னும் அதிகதிகமாகவும் அறுவடை செய்வோம்.
கடலோரப்பகுதிகளில் இயற்கை அரணாக இறைவன் ஏற்படுத்தி வைத்திருந்த சவுக்குக் காடுகளை சுயநலத்துக்காக அழித்துவிட்டு சுனாமியால் பேரழிவை சந்தித்தது யாருடைய பிழை? பேரழிவிற்குப் பின்னர் ஒரு கூட்டம் இது பக்தியற்றவர்கள் மீதான தேவகோபாக்கினை என்றது, இன்னொரு கூட்டம் இப்படி குழந்தைகளையும் அப்பாவிகளையும் அழித்த கடவுள் இரக்கமற்றவன் என்று தூற்றியது. அந்த இரு கூட்டத்தாரும் அறிவின்றி கடவுவுளை தூற்றினார்கள் என்பதே உண்மை!
புவி வெப்பமயமானது யாரால்? ஓசோனில் ஓட்டை விழுந்தது யாரால்? ஆற்று மணலைத் திருடச்சொல்லியும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவிக்கும் அணுஉலைகளையும் ஏற்படுத்தச்சொல்லி இயேசுநாதரா உங்களுக்கு சொன்னார்? பிளாஸ்டிக்கை இயேசுவா உருவாக்கி உங்கள் கையில் கொடுத்தார்? காற்று மாசுபாடு, ஒலி/ஒளி மாசுபாடு, பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் மாசுபாடு என்று எல்லாவற்றையும் சீரழித்துவிட்டு, கர்த்தர் அருமையாக உருவாக்கி நம்கையில் கொடுத்த எதை சரியாக பராமரித்து வைத்திருக்கிறோம்? சரி, உத்தரகண்ட் பேரழிவிற்கு காரணம் என்ன? கடந்த 50 – 60 வருடங்களாக அந்த மலைப்பகுதியில் செய்யப்பட்டு வந்த மாபெரும் காடு அழிப்பு, இயற்கை அரணான மரங்களை அழித்ததன் விளைவாக ஏற்பட்ட மண் சரிவு. இது முழுக்க முழுக்க மனிதத்தவறினாலும் யாத்திரிகர்களை முன்னெச்சரிக்கையாகப் பாதுகாக்க தவறிய அரசின் கவனக்குறைவினாலும் ஏற்பட்ட அழிவு .
தன்னை வணங்காதவர்களை இயேசு அழிப்பாரா?
அப்படியானால் கடைசிகாலத்தில் இயேசுவின் வருகைக்கு அடையாளமாக மாபெரும் இயற்கை சீற்றங்கள் நடக்கும் என்பதுதானே வேதம் தரும் எச்சரிப்பு என்றால் நிச்சயமாக இயற்கை பேரழிவுகள் இயேசுவின் வருகைக்கு முன்னடையாளங்கள்தான். ஆனால் அவற்றை தாம் ஏவிவிட்டதனால் வருவதாக இயேசு அங்கு குறிப்பிடவில்லை. இவை நிகழும் என்றுதான் முன்னறிவிக்கிறார். பூமியின் அதிபதியான மனிதன் அதை ஒழுங்கின்றி, பொறுப்பின்றி நிர்வகித்ததன் விளைவாக இப்படிப்பட்ட எதிர்விளைவுகளை அவன் சந்திக்க நேரிடும் ஏற்படும் என்ற எச்சரிபேயன்றி அது தேவனுடைய பரிபூரண சித்தமல்ல. இது கர்த்தருடைய முன்னறிவினால் உண்டான தீர்க்கதரிசனமேயன்றி அவர் மனதின் விருப்பமல்ல…ஆனால் ஒருவர் சொன்ன தொனியானது தன்னை வணங்காதவர்கள் மீது கர்த்தர் இயற்கையை ஏவிவிட்டு அவர்களை கொடூரமாய் கொல்லுவதுப்போல காட்டுவதென்பது முழுக்க முழுக்க இயேசுகிறிஸ்து பற்றிய ஒரு பொய் பிம்பத்தை தோற்றுவிப்பதாகும். இதை அவர் ஆர்வக்கோளாரினால் செய்திருந்தாலும் அது இயேசுவின் நாமத்துக்கு மகிமைக்கு மாறாக இழுக்கையே கொண்டுவந்து சேர்க்கும்.
ஒன்றை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்,கடுமையான தேவ தண்டனைகள் ஊற்றபட்ட பழைய ஏற்பாட்டு காலத்தில்கூட தேவன் தன்னை வணங்கவில்லை என்ற காரணத்துக்காக பெலிஸ்தரையோ, கானானியரையோ, மோவாபியரையோ அம்மோனியரையோ தண்டிக்கவில்லை காரணம் அவரது உடன்படிக்கை அவர்களோடு இல்லை. தன்னோடு உடன்படிக்கை பண்ணின இஸ்ரவேலர் தன்னை விட்டு சோரம்போய் வேற்று தெய்வங்களை பின்பற்ற ஆரம்பித்தபோதே தேவன் அவர்களை தண்டித்தார். இதை பழைய ஏற்பாடு முழுவதிலும் நாம் காணலாம். இஸ்ரவேல் அல்லாத பிற தேசத்தாரை அவர்கள் இஸ்ரவேலுக்கு செய்த அநியாயங்களின் நிமித்தமும், அவர்களது சொந்த அக்கிரமங்களின் நிமித்தமும் தண்டித்தாரேயன்றி தன்னை வணங்காத காரணத்துக்காக தண்டிக்கவில்லை. அதுபோலவே அவரோடு சுவிசேஷத்தின் மூலம் புதிய உடன்படிக்கைக்குள் நுழைந்துள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் அவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறும்போது அவர் நம்மை சிட்சிப்பார். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளாத பிற மதத்தினர் பற்றி; ஒரு மனிதன் தான் சாகும்வரை அவருடைய சுவிசேஷத்தையும் கிருபையையும் புறக்கணிக்கும் உரிமை அவனுக்கு முழுவதும் உண்டு. அதன் பலனாக அவன் நித்திய ராஜ்ஜியத்தை இழந்துபோவானேயன்றி அவன் பூமியில் வாழும்வரை தனது சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும்படி தேவன் அவனை வற்புறுத்தவோ, சித்திரவதை செய்யவோ மாட்டார். ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் உக்கிர கோபம் கொண்டு அற்பாயுசில் அழித்துப்போடவும் மாட்டார். அப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் புதிய ஏற்பாட்டில் எங்கும் இல்லை. மனிதனுக்கு கொடுக்கபட்ட கடைசிநாள் வரை தேவன் அவன் தன்னுடைய அன்பையும் இறையரசையும் ஏற்றுக்கொள்ளும்படி அவனுக்காக எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்து பொறுமையோடு காத்திருக்கிறார்.
சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கான நியாயத்தீர்ப்பென்பது மறுமைக்குரியதேயன்றி இம்மைக்குரியதல்ல. இம்மையில் அவர்களது சாய்ஸ்-க்கு மதிப்பு கொடுத்து நாம் அவர்களைவிட்டு அமைதியாக விலகிச்செல்லுவதும் தொடர்ந்து அவர்களுக்காக ஜெபிப்பதுமேயன்றி நாம் செய்யக்கூடியது வேறொன்றுமல்ல.
எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார் (மாற்கு 6:11).
அப்படியானால் உலகின் கடைசிநாளான நியாயத்தீர்ப்பு நாள்வரை அந்தப் பட்டணங்களை தன்னை ஏற்றுக்கொள்ளாததன் நிமித்தம் கர்த்தர் அழிக்கமாட்டார் என்பது இதன்மூலம் தெரிகிறது.
- படித்ததில் பிடித்தது
Permissions in this forum:
You cannot reply to topics in this forum