மனிதனும், பறவையும்
Sun Jul 07, 2013 5:42 am
ஒரு மனிதன் ஒரு பறவையைப் பிடித்தான்.
"நான் ஒரு கைதியாக உங்களுக்கு எந்த விதத்திலும் உபயோகப்படப் போவதில்லை. என்னை விடுதலை செய்யுங்கள். உங்களுக்கு மதிப்பு மிக்க மூன்று அறிவுரைகளைக் கூறுவேன்" என்று சிறைபட்ட பறவை அந்த மனிதனிடம் சொன்னது.
முதல் அறிவுரையை மனிதன் பிடியிலிருக்கும் போதும்; இரண்டாம் அறிவுரையை மரக்கிளையை அடைந்த பின்பும்; மூன்றாம் அறிவுரையை மலையுச்சியைத் தொட்ட பின்பும் சொல்வதாக, பறவை மனிதனுக்கு உறுதியளித்தது.
மனிதனும் அதற்கு உடன்பட்டான். முதல் அறிவுரையைச் சொல்லும்படி கேட்டான்.
"நீங்கள் எதையாவது இழந்தால் - அது வாழ்க்கையைப் போலவே மதிப்பு மிக்கதாய் இருந்தாலும் - அதற்காக வருத்தப்பட வேண்டாம்." அப்போது மனிதன் பறவையைப் பறக்கவிட்டான். பறவை மரக்கிளையில் தத்தித் தாவி ஏறியது.
பறவை இரண்டாம் அறிவுரையைத் தொடர்ந்தது :
"புலன்களுக்கு முரண்பாடாகத் தோன்றும் எதையும் நிரூபணம் இல்லாமல் நம்ப வேண்டாம்."
சொல்லிவிட்டுப் பறவை மலையுச்சிக்குப் பறந்து சென்று சொன்னது : "துரதிர்ஷ்டமிக்கவரே! எனக்குள்ளே பெரிய ஆபரணங்கள் இருக்கின்றன. என்னைக் கொன்றால்தான் அது உங்கள் வசப்படும்." அதைக் கேட்ட அந்த மனிதன் தான் இழந்ததை நினைத்து வேதனையடைந்தான்.
"மூன்றாவது அறிவுரையைச் சொல்" என்று பறவையிடம் கேட்டான் மனிதன்.
"நான் சொன்ன முதலிரண்டு அறிவுரைகளைச் செவி மடுக்காத நீங்கள் மேலும் அறிவுரைகளைக் கேட்கும் முட்டாள்தனத்தை எங்கு போய்ச் சொல்வது !
இழந்ததைக் குறித்து துன்பமடையக் கூடாதென்றும், புலன்களுக்கு முரண்பாடானதை நம்பக் கூடாதென்றும் நான் உங்களுக்குச் சொன்னேன்.
இரண்டையுமே நீங்கள் இப்போது செய்கிறீர்கள். வேடிக்கை யானதை நீங்கள் நம்புகிறீர்கள். இழந்து போன சிலவற்றிற்காக வேதனையடைகிறீர்கள்! பெரிய ஆபரணங்களை வைத்துக் கொள்ளுமளவு என்னுடல் அவ்வளவு பெரியதல்ல.
நீங்கள் ஒரு முட்டாள். மனிதன் மேல் சாதாரணமாக என்னென்ன நிபந்தனைகள் திணிக்கப்படுமோ அந்த எல்லைக்குள் தான் நீங்கள் உழல வேண்டும்." என்பது பறவையின் பதிலாக அமைந்தது.
நன்றி: தமிழ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum