தி.நகர் வரலாறு
Fri May 10, 2013 5:41 am
சென்னையில்
ஷாப்பிங் போக வேண்டும் என்றதுமே நினைவுக்கு வருவது தி.நகர்தான். ஆனால்
எந்நேரமும் தி.நகரிலேயே தவம் கிடப்பவர்களுக்கு கூட தியாகராய நகர் என்ற
பெயருக்கு காரணமான அந்த தியாகராயர் பற்றி அதிகம் தெரிவதில்லை. உண்மையில்
தியாகராயரும் ஒரு நடமாடும் தி.நகர் சிறப்பு அங்காடியாகத்தான்
இருந்திருக்கிறார். காரணம், பல அரிய பண்புகளை அந்த அற்புத மனிதரின் வாழ்வில் இருந்து நாம் ஷாப்பிங் செய்துகொள்ள முடிகிறது.
சென்னை கொருக்குப்பேட்டையில் ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தில் 1852ஆம்
ஆண்டு ஏப்ரல் 27ந் தேதி தியாகராயர் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில்
பி.ஏ. பட்டம் பெற்ற அவர், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக
பணியாற்றினார்.
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, அவர்தான் அதனை முன்னின்று நடத்தினார்.
நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் அவரது குடும்பம் ஈடுபட்டிருந்தது. இது தவிர வேறு பல தொழில்களும் அவர்களுக்கு இருந்தன.
பிட்டி நெசவு ஆலை என்ற பெயரில் சுமார் நூறு தறிகளைக் கொண்ட நெசவாலையை
ஏற்படுத்திய தியாகராயர், கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை
அறிமுகப்படுத்தினார்.
அதற்கு முன்பெல்லாம் நாடாவை கைகளில்
தள்ளிதான் நெய்தார்கள். இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள்
உலகப் புகழ் பெற்றவையாக விளங்கின.
காந்தியடிகள் சென்னைக்கு
வந்தபோது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து பார்வையிட்டார். ஒரு தறியில்
அமர்ந்து நெய்தும் பார்த்தார். இந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள்வதற்காகத்
தன்னுடைய மகன்கள் மணிலால், மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத
பயிற்சிக்காகவும் தியாகராயரிடம் அனுப்பி வைத்தார்.
காந்தியிடம்
மிகுந்த மரியாதை இருந்தாலும், அவரது பல கொள்கைகளில் இருந்து தியாகராயர்
முரண்பட்டார். ஒருகட்டத்தில் இனிமேல் காங்கிரசில் இருக்க முடியாது என
முடிவெடுத்து வெளியேறினார்.
'தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்'
என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'நீதி' (Justice)
என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இதனால் அந்த அமைப்பையே நீதிக்கட்சி
(Justice Party) என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
நீதிக்கட்சி பிரமுகர்களுடன் தியாகராயர்
சர்.பி. தியாகராயரின் தன்னலமற்ற விடாமுயற்சியால், 1921ஆம் ஆண்டு நடைபெற்ற
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மைப்
பெற்றது.
அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபு, நீதிக்கட்சியின்
தலைவரான தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால்,
முதலமைச்சர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர்
சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார், தியாகராயர்.
இவர் 1892 முதல் 1925 வரை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பணி
ஆற்றினார். 1920 ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்ற சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் மேயர் தியாகராயர்தான். தொடர்ந்து 1922 வரை மூன்று முறை சென்னை
மேயராகப் பதவி வகித்த தியாகராயரைப் போற்றும் வகையில் ரிப்பன் மாளிகையின்
வாயிலில் இவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
1959-ஆம் திராவிட
முன்னேற்றக் கழகம் சென்னை மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்பை முதன்முதலில்
ஏற்றபோது, பேரறிஞர் அண்ணாவின் ஆணைப்படி இவரது சிலைக்கு மரியாதை
செலுத்திவிட்டுதான் திமுக உறுப்பினர்கள் மாமன்றத்தினுள் நுழைந்தனர்.
மாநகராட்சி சார்பில் ஏராளமான பள்ளிகளைத் தொடங்கிய தியாகராயர், அங்கு
பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, இலவச பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை
வழங்கி இன்றைய அரசுகளின் பல நல்ல திட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கினார்.
தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார். வடசென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் தொடங்கியதே.
சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவவும் பெரும்
தொண்டாற்றினார். செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து அண்ணாமலை
பல்கலைக் கழகம் உருவாக உறுதுணையாக இருந்தார். பாடசாலைகளைப் போலவே
தொழில்நுட்பப் பயிற்சி பள்ளிகளையும் தொடங்கினார்.
சுயமரியாதைக்
கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் தியாகராயர், கடவுள் திருப்பணிகளிலும்
நிகரற்று விளங்கினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தை பத்தாயிரம் ரூபாய்
செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார்.
பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார். வண்ணாரப்பேட்டையில்
உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தின் கண்களில்
பதிப்பதற்காக இரண்டு கண்ணாடி கண் விழிகளை லண்டனிலிருந்து வரவழைத்தார்.
எப்போதும் வெள்ளை உடையில் பளிச்சென காட்சியளிக்கும் தியாகராயர், 'வெள்ளுடை
வேந்தர்' என அன்புடன் அழைக்கப்பட்டார். 1905ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர்
5ஆம் ஜார்ஜ் சென்னை வந்தபோது, மாநகராட்சி மேயராக இருந்த சர். பிட்டி.
தியாகராயர், அதே வெள்ளுடையில் இளவரசரை வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல்
அளித்தார். ஆங்கிலேய ஆட்சியில் ஒரு தமிழருக்கு இந்த அனுமதி கிடைப்பது
அரிதான விஷயமாக இருந்தது.
1925இல் தியாகராயர் இறந்தபோது
இவரது நினைவாக சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்குதான் தியாகராய
நகர் (தி.நகர்) எனப் பெயர் சூட்டப்பட்டது.
மேலும் பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரங்கம் ஒன்றும் இருக்கிறது.
அத்துடன் பெங்களூரிலும் இவரது நினைவாக தியாகராய நகர் என ஒரு நகர் இருக்கிறது.
நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum