மனதில் உறுதி வேண்டும்
Sun May 05, 2013 7:42 am
ஞானி ஒருவர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர்
ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீட்டில் நிறைய
மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் அந்த ஞானி நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப்
பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன
நண்பர், இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு
இரையாக நேரிடும் என்பதை உணர்ந்து, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து
வேறு திசையில் ஓடினார். ஆனால், அந்த ஞானியோ அப்படி இப்படி அசையாமல் ஆணி
அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த
மாடு ஞானியை விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.
அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே
பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
ஞானி அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.
“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில்
உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக்
கேட்டு மெல்லப் புன்னகைத்த ஞானி, “நான் வித்தியாசமாக எதையும் செய்து
விடவில்லை. ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம்
அதனால் வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன்
நின்றுவிட்டேன். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும்
உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.
ஆம் நண்பர்களே, எந்த
பிரச்சனைகள் நம்மை எதிர்கொண்டு வந்தாலும் அதைக் கண்டு பயந்து ஓடாமல்,
வருவது வரட்டும் என்ற மன உறுதியோடு நாம் எதிர் நின்றால், நம்மை நோக்கி
ஒருவழியாய் வந்த பிரச்சனைகள் ஏழு வழியாய் ஓடிப்போகும்.
"... ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்." உபாகமம் 28 : 7
நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum