தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? Counter

Go down
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? Empty உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?

on Fri Jan 27, 2017 7:31 pm
Message reputation : 100% (1 vote)
கைப்பேசி மீண்டும் ஒருமுறை கடைசி வரை ஒலித்து அடங்கிற்று. மறுபடியும் பாஸ்டர்தான் . ஜோயல் மீண்டும் அதை அலட்சியப்படுத்திக் காரை செலுத்தினான் . முதல் முறை அலட்சியப் படுத்தியபோது இருந்த குற்றவுணர்வு இப்போது இல்லை . மூன்று வாரங்களில் அதெல்லாம் பழகிப் போயிருந்தது. 


ஆம் . கர்த்தரை விட்டு விலக ஆரம்பித்த மூன்றாவது வாரம் இது . ஜெபம் இல்லை. இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் கடைப்பிடிக்கிற வேதவாசிப்பு இல்லை. சபைக்குப் போவதும் இல்லை . ரீட்டாவும் வாக்குவாதம் செய்வதில்லை .


டிஷ்யூ பேப்பருக்காக dashboardடைத் திறந்தான் . அதில் இருந்த வேதப்புத்தகம் எரிச்சலூட்டியது ,
" சொல்லி எத்தன நாளாச்சு ? இன்னும் clear பண்ணாம வெச்சுருக்கா . இன்னிக்கு எல்லாத்தையும் அப்புறப்படுத்திடணும் . மூஞ்சிலயே முழிக்கக் கூடாது . காரின் முன்புறத்திலும் , பின்புறத்திலும் இருக்கும் வசனங்களையும் 
அழிக்கணும் ".


நினைக்க நினைக்க வெறுப்பு வந்தது . நினைவு தெரிந்த நாள் முதலாய் ஒரு நாள் கூடக் கர்த்தரைப் பிரிந்து வாழ்ந்ததே கிடையாது . எத்தனை சோதனைகள் , துயரங்கள் ? எதிலும் கர்த்தரை விட்டுக் கொடுத்ததில்லையே. 


கர்த்தர் செய்த நன்மைகளை சபையில் சாட்சியாய் நின்று அறிவிக்கவும் ஒருபோதும் மறந்ததே இல்லை . இப்போதோ ஒரு சாட்சியே முன்னின்று வேதனைப்படுத்துகிறது .


வேண்டாம் . இனி அவரோடு எந்தத் தொடர்புமே வேண்டாம் . அவமானப்பட்டது போதும் . சர்வ வல்லமையுள்ள தேவன் நினைத்திருந்தால் இத்தனை பெரிய வேதனை நிகழாமல் காத்திருக்கலாமே ? இன்னும் ரீட்டா அழுது கொண்டிருக்கிறாள் . அவளும் ஒருபோதும் அவரை விட்டுக் கொடுத்ததில்லையே ?


**************


ஜோயல் தம்பதிகள் சபையில் மிகவும் பிரசித்தம் . கர்த்தருக்கான காரியங்களில் எப்போதும் முன்னிற்பதும் , ஊழியங்களை முழுமனதோடு தாங்குவதும் , கர்த்தர் செய்கிற நன்மைகளைத் தயங்காமல் சாட்சியாய் அறிவிப்பதும் , புதிய ஆத்துமாக்களைக் கர்த்தருக்கென்று 
ஆதாயப்படுத்துவதும் .....


திருமணமாகி மூன்று ஆண்டுகள் அவர்களுக்குக் குழந்தை இல்லை. டாக்டர் , ரீட்டாவை scan செய்து பார்த்துவிட்டு , அவளது கர்ப்பப் பையில் நார்த் திசுக்கட்டி இருப்பதாகவும் , அதனால்தான் கர்ப்பம் உண்டாகவில்லை என்றும் , ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று ஒரு பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியபோதும்கூட அவர்கள் கர்த்தரிடம் மட்டுமே பிரச்சனையை ஒப்புக் கொடுத்தார்கள் .


சபையே அவர்களுக்காக ஜெபித்தது . அடுத்த மூன்றாவது மாதம் எடுத்த ஸ்கேனில் அந்தக் கட்டி இருந்த இடமே தெரியவில்லை. எவ்வளவு பெரிய சாட்சி ? பலருடைய விசுவாசம் வர்த்திக்கும்படி அவர்கள் அதை சாட்சியாகப் பகிர்ந்துகொண்டார்கள் . அடுத்த சில நாட்களில் அவர்கள் பகிர்ந்துகொண்டதோ மிகப் பெரிய சாட்சி . சந்தோஷமான சாட்சி .


ரீட்டாவின் கர்ப்பத்தில் ஒரு குழந்தை . என்ன ஒரு சந்தோஷம்! குதூகலத்தால் நிரம்பியது வீடு. அலுவலகத்திலும் ஜோயல் ஒரு பெரிய விருந்து வைத்தான் . சபையிலும் இந்த சாட்சியைப் பகிர்ந்து கொண்டார்கள் . சந்தோஷம் தொடர்ந்தது இரண்டு மாதங்கள் வரை . 


அடுத்த பரிசோதனையில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அறுபது நாட்களுக்கான வளர்ச்சி கருவில் காணப்படவில்லை . இதயத்துடிப்பும் உணர முடியவில்லை. Scan report தெளிவாகவே சொல்கிறது . 


பாஸ்டர் சொன்னார் ,
" கர்ப்பம் விழுகிறதும் மலடும் என் தேசத்தில் இருப்பதில்லை " 
யாத்திராகமம் 23 : 26 வசனத்த தியானிச்சுக்கிட்டே இருங்க . கர்த்தர் அற்புதம் செய்வார் . மருத்துவத்துறையின் எவ்வளவோ அறிக்கைகளைக் கர்த்தர் அவமாக்கி இருக்காரே ! " 


அவருடைய வார்த்தைகள் அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது . கண்ணீர் நீங்கி சமாதானம் மலர்ந்தது . ஆனால் அதுவும் ஒரு வாரமே நீடித்தது . அபார்ஷன் . தாள முடியாத பெரிய வலி. இருவருமே கதறி அழுதுவிட்டார்கள் . இரண்டு நாட்கள் ஒன்றுமே சாப்பிடவும் இல்லை . 


மூன்று நாட்களுக்குப் பிறகுதான் ஜோயல் அலுவலகம் சென்றான் . அலுவலகத்தில் இருந்தவர்களின் அனுதாபப் பார்வை நெருப்பாய் சுட்டது. எத்தனை கம்பீரமாய் அவன் கர்த்தரை அறிவித்த இடம் அது ? 


மனம் நொந்து போனது . 


" எனக்குக் கர்த்தர் இப்படி செய்திருக்கக் கூடாது " . அவன் மனம் தொடர்ந்து புலம்பியது . புலம்பல் வெறுப்பாக மாறியது. ஒரு முடிவுக்கு வந்தான் ,


" பட்டது எல்லாம் போதும் . இனி இந்த இரக்கமில்லாத கடவுளும் வேண்டாம் . சபையும் வேண்டாம் " .


*************


பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த ஜோயல் சுயநினைவுக்கு 
வந்தான். குளிர்ச்சியாக ஏதாவது குடிக்கத் தோன்றியது . காரின் வேகத்தைக் குறைத்தான் . ஒரு குளிர்பானக் கடையின் அருகே வண்டியை நிறுத்தும்போது அது சம்பவித்தது . காரின் டயர் பெரிய சத்தத்தோடு வெடித்துச் சிதறியது . 


சாலையில் இருந்தவர்கள் அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்தார்கள். ஜோயல் உடல் நடுங்க வெளியே வந்தான் . எதிரே இருந்த சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்த மூன்று ஆட்களும் ஓடி வந்துவிட்டார்கள் . 


" சார் , உங்களுக்கு ஒன்னும் ஆயிடலையே ? " எல்லாரும் விசாரித்தார்கள் .


குளிர் பானத்தைக் குடித்து முடித்தபோது கொஞ்சம் பதற்றம் தணிந்து நிதானம் வந்திருந்தது . மெக்கானிக்குக் கால் செய்து இருக்கிற இடத்தைத் தெரிவித்தான் . அரைமணிநேரம் ஆகியும் யாரும் வரவில்லை . எவ்வளவு நேரம் நின்று கொண்டிருப்பது ? அப்படியே சுற்றிலும் இருந்த இடங்களைப் பார்க்கப் புறப்பட்டான் . 


*************


சாக்கடை சுத்தம் செய்துகொண்டிருந்தவர்கள் வெளியே வந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் . இதுபோன்றவர்கள்மேல் அவனுக்கு எப்போதுமே ஒரு அனுதாபம் உண்டு . இவர்கள் இல்லையென்றால் ஊர் என்னவாகும் ? 


அவர்களில் ஒரு பெரியவரும் இருந்தார் . தான் வைத்திருந்த பையில் பரபரப்பாகக் கைவிட்டு எதையோ எடுத்தார் . அது ஒரு பைபிள் . அதற்கு முத்தம் கொடுத்து விட்டுப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார் . முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் . ஜோயலால் நம்ப முடியவில்லை.


" என்ன பெரிய வாழ்க்கையை அந்தக் கர்த்தர் இவருக்குக் கொடுத்து விட்டார் , இந்த நிலையிலும் இந்த மனிதன் வேதத்தை தியானிப்பதற்கு ? ஏதோ ரொம்ப நாள் பிரிந்திருந்த சொந்தத்தை சந்திப்பது போல் இப்படி ஒரு அன்பா வேதப்புத்தகத்தின் மேல் ? " . 
ஜோயலால் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. 


" பெரியவரே " என்றான் . ஜோயல் அழைப்பான் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. பதற்றமாக , 
" என்னா சார் ? " என்றார் .


" இல்ல , நீங்க பாத்துக்கிட்டு இருக்குற வேலையே யாரும் விரும்பாத ஒரு வேலை . இந்த வேலையில் உங்கள வச்சிருக்குற ஒரு கடவுள் தொடர்பான வேதத்தையா இவ்ளோ சந்தோஷமா படிக்கிறிங்க ? நம்மோட நிலைமை பற்றி அக்கறை இல்லாத ஒரு கடவுள் தேவையா நமக்கு ? " . இன்னும் எவ்வளவோ பேசத்தோன்றியது . நிதானித்து அடக்கிக் கொண்டான் .


பெரியவர் அவனது கேள்விகளால் பாதிப்பு எதுவும் அடைந்ததாகத் தெரியவில்லை. புன்னகை அவர் உதடுகளில் .
" என்னா சார் இப்படி சொல்லிட்டிங்க ? நான் ராசாதி ராசாவோட புள்ள சார் . இதே மாரியப்பன இருவது வருசம் முன்னாடி பாத்திருக்கணும் நீங்க . நாய விட கேவலமான வாழ்க்கை சார் . பொழுது விடிஞ்சா தண்ணிதான் . குடிச்சுப்புட்டு குப்ப மேட்டுலயும் , சாக்கடையிலயுந்தான் கிடப்பேன். 


வீட்டுக்குப் போனா பொண்டாட்டி புள்ளைங்கள போட்டு அடிக்கிறதே வேலை. நான் வீட்டுக்கு வந்துட்டாலே ஏதோ துஷ்ட மிருகம் வந்துட்ட மாதிரி எல்லாருக்கும் ஒரு மரண பயம் வந்துடும் சார் . கல்யாணம் காச்சின்னா கூட ஒரு பய பத்திரிக்க வைக்க மாட்டான் . அங்கயும் போய் ஏதாவது பிரச்சனை பண்ணிடுவேன்னு பயம் . 


ஒரு கட்டத்துல ஒடம்புல இருந்த தெம்பெல்லாம் போயிடுச்சு சார் .அடிச்சா வாங்கிக்கிற என் பொண்டாட்டி பிள்ளைங்களும் அடிச்சு விரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஒடம்பெல்லாம் ரத்த காயம் . வேலையுமில்ல. கையில காசில்லாததனால கூட்டாளிங்க கூட வெரட்டி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க . செத்துப் போயிடலாம்னு தோனுச்சு. அப்பதான் சார் ஒரு தேவனோட மனுஷன் மூலமா கர்த்தர் என்னத் தேடி வந்தார் .


கர்த்தரைப் பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்குள்ள இருக்குற பாவங்கள் தெரிஞ்சது. மீளவே முடியாதுன்னு நான் நினைச்ச கெட்ட பழக்கங்களை என் குதிகாலால் தலையை நசுக்க என் தேவன் வலிமை கொடுத்தார். 


வாழ்க்கை அடியோட மாறிடுச்சு . என்னப் பாத்து பயந்து நடுங்குன என் குடும்பம் , நான் எப்போ வேலை முடிஞ்சு வருவேன்னு காத்திருக்க ஆரம்பிச்சுது . கல்யாணப் பத்திரிக்கை வைக்க பயந்த சாதி சனம் , நான் வந்து ஜபம் பண்ணி கல்யாணத்தை நடத்தி வச்சாதான் நல்லதுன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க . இன்னிக்கு வரைக்கும் சந்தோஷந்தான் சார் வாழ்க்கையில .
கர்த்தர் எனக்குக் குடுத்திருக்கிற ஆசீர்வாதங்களை நினைச்சு ஸ்தோத்திரம் பண்ணவே வாழ்நாள் பத்தாது சார் . இதுல கிடைக்காததை நினைக்க நேரம் ஏது ? நாலு பேர் மதிக்கிற மாதிரி வாழுற இந்த ராஜ வாழ்க்கை சொர்கம் சார் . 
பத்து வருசத்துக்கு முன்னால ஒரு தடவை ஒரு எடத்துக்கு டாங்க் சுத்தம் பண்ண நானும் , இன்னும் ரெண்டு பேரும் போயிருந்தோம் . உள்ள இறங்கும்போது ஒரு பிரச்சனையும் இல்ல . ஆனா மம்புட்டியால ஒரு வறண்டு வறண்டுனதுமே கிளம்புனிச்சு பாருங்க ஒரு வாடை . நான் அப்புடியே மூச்சை அடக்கிக்கிட்டேன் . ஆனாலும் மயங்கிட்டேன். 


முழிச்சுப் பாக்கும்போதுதான் தெரிஞ்சது , அந்த மூனு பேர்ல நான் மட்டுந்தான் உயிரோட இருக்கேன்னு . அட அவ்வளவு ஏன் சார் . ரெண்டு வருசம் இருக்கும் . சாரதி நகர் மெய்ன் ரோட்டுக்குப் பக்கத்துல வேல செஞ்சுக்கிட்டு இருந்தோம். உங்கள மாதிரியேதான் ஒரு சார் வேகமா வந்துக்கிட்டு இருந்த காரு இதே மாதிரியே டயர் வெடிச்சுப் போய்டுச்சு சார் . வந்த வேகத்துல அவரால கன்ட்ரோல் பண்ண முடியல. 


எதிர்த்த மாதிரி வந்த லாரியில அடிச்சாரு பாருங்க. வண்டி அப்பளம் மாதிரி நொறுங்கிப் போச்சு. துண்டு துண்டாதான் அவரை வெளியே எடுத்தாங்க . புலம்பல் 3 :22 ல ஒரு வசனம் உண்டு சார் .


" நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே " . அது சத்தியமான உண்மை சார் . 


நாம அவரைத் தேர்ந்தெடுக்கல சார். அவர்தான் சார் நம்மள தேர்ந்தெடுத்துருக்காரு . இந்த வேதப் புத்தகம் தொப்புள் கொடி மாதிரி சார். அவர் இது மூலமாதான் நமக்கு போஜனம் கொடுக்குறார் . பாருங்க அழுதா ஆறுதல் சொல்லும் , குழம்பிக் கிடுந்தா ஆலோசனை சொல்லும் , பயந்து கிடந்தா தைரியப்படுத்தும் . சார் சார் , நீங்க ஏன் சார் கண் 
கலங்குறிங்க ? ".


ஜோயல் சுதாரித்துக் கொண்டான் . 


" சே சே , கண்ல தூசி பட்டுருச்சு " .


கைப்பேசி ஒலித்தது . மீண்டும் பாஸ்டர் . இப்போது எடுத்துப் பேசினான் . 


" மன்னிச்சுக்குங்க பாஸ்டர் . ரொம்ப தப்பா நடந்துக்கிட்டேன் ".


பாஸ்டர் சொன்னார் ,
" நீங்க ஒன்னும் கடவுள் இல்லேன்னு சொல்லலை . அவர் மேல கோபமா இருந்திங்க அவ்வளவுதான். தம்பி , நாம எவ்ளோதான் விலகி ஓடுனாலும் , போய் சேருற எடத்துல நமக்கு முன்னால அவர்தான் இருப்பார். எதையும் நெனைக்காதிங்க . சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வரேன் " .


இதுவரை அனுபவித்திராத புதிய அபிஷேகம் ஜோயலை நிரப்பியது. தண்ணீரின் மூச்சுத்திணறி வெளியில் வந்தது போல் இருந்தது . பெரியவரிடம் கேட்டான் ,


" இங்க நீங்க எத்தனை பேர் வேலை செய்றீங்க ? " . அவர் சொன்னார் ,


" மூனு பேரு சார் " .


புன்னகையுடன் சொன்னான் ,
" பக்கத்து ஹோட்டல் பணம் குடுத்துடுறேன் பிரியாணி வாங்கிக்குங்க ". 


இன்னொரு தொழிலாளி சந்தோஷமாகக் கேட்டார் ,
" என்னா சார் விசேஷம் , பிரியாணி எல்லாம் வாங்கித் தரிங்க ? பொறந்த நாளா ஒங்களுக்கு ? " என்றார். 


ஜோயல் புன்னகையுடன் சொன்னான் ,


" ஆமாம் பிறந்த நாள்தான் . மறுபடியும் பிறந்துருக்கேன் " .


 
கர்த்தர் செய்த ஏராளமான நன்மைகளை நினைத்துப் பார்க்கும்போதுதான் அவர் செய்யும் ஒவ்வொன்றிலும் காரணம் இருக்கும் என்று விளங்கும்.


" உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?


நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர், நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.


நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,


அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும் ".
சங்கீதம்139:7/8/9&10
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum