தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ராபர்ட் கால்ட்வெல்  Counter

Go down
medilta
medilta
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
Posts : 82
Join date : 24/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

ராபர்ட் கால்ட்வெல்  Empty ராபர்ட் கால்ட்வெல்

Sat Aug 24, 2013 8:34 am
ராபர்ட் கால்ட்வெல்





தமிழ் மறுமலர்ச்சியில் ராபர்ட் கால்டுவெல்:
உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன। காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.


வடமொழியைத் 'தேவ பாஷை' என உயர்த்தியும் தமிழை 'நீச்சபாஷை' எனத் தாழ்த்தியும், தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856, 1875 ) எனும் நூல் ஆகும்.

தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது. கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.

கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள 'கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று 'கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படி பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் 'அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் 'பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டி யிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புக்கொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார். கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது.

சென்னைக்கு வந்ததும் 'துருவர்' (Mr. Drew) எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலான வற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மி­சன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார். அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார். நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விரும்பாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.

மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் (Tracy) அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 2 தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையை அன்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது...

இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவு பெற்றவராக மாற்றினார். 1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 ரூபாய் அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் 'தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார். மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார். மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.


"திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே..." இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Dr. Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதே யெனினும் பொருந்தும் "(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் ...." தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.(தமிழ்வரலாறு, ப.33) எனவும் 'கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 4 எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.


கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளை யெல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது. அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் 'வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் 'லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.

கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார்.

கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84). கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக (யஷ்விஜுலிஸ்ரீ) கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 ஜனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.

கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெருநாடும், அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்து கொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்." இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.



நன்றி: கிறிஸ்தவ திரட்டி





Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum