உமாசங்கர் ஐ.ஏ.எஸ் செய்வது சரியா? தவறா?
Thu Feb 05, 2015 8:33 am
உமாசங்கர் ஐ.ஏ.எஸ் செய்வது சரியா? தவறா?
யார் இந்த உமா சங்கர் ஐ.ஏ.எஸ்?
தமிழ்நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர்.இருபது ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் மற்றும் கடந்த இருபது ஆண்டுகளில் தன் நேர்மைக்காக பலமுறை பணியிட மாற்றம் என்ற தண்டனையால், அரசியல்வாதிகளால் பந்தாடப்பட்டவர்.
தமிழ்நாட்டில் கழக ஆட்சிகள் இரண்டுமே ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதற்கு,இவரது அதிரடி பணியிட மாற்றங்களும்,இவர் மீது பொய்யாக புனையப்பட்ட குற்றசாட்டுகளுமே சாட்சி.
உமாங்கர் மற்றும் சகாயம் போன்ற நேர்மையாளர்களின் பணிமாற்றம் கலைஞர் மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு ஊழல் அயோக்கியர்களின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டும்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துவதில் உமா சங்கரும்,சகாயமும் எவ்விதத்திலும் சளைக்காதவர்கள்.பணியிட மாற்றத்தை கண்டு பயந்து ஒருபோதும் வளைந்து நெளிபவர்களோ அல்லது கூனிக் குறுகி நிற்பவர்களோ அல்ல.
உமாசங்கரின் நேர்மைக்கு சாட்சியாக இதோ சில உதாரணங்கள்!
சமீப காலத்தில் தமிழ்நாட்டின் மிக மிக கேவலமான ஊழல் எதுவென்று எண்ணிப் பார்த்தால், அது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடைபெற்ற சுடுகாட்டு கூரை ஊழல் தான்.அந்த கேடுகெட்ட ஊழலை செய்த நபர் (அ)டிமைகள் திமுகவில் இருந்த செல்வகணபதி என்ற அமைச்சர்.
அவரே இறுதியாக கலைஞரின் குடும்ப திமுகவில் ஐக்கியமாகி, பின்பு சுடுகாட்டு கூரை ஊழலுக்கான தண்டனையும் பெற்று,அதன் காரணமாகவே தன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பறிகொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர்.
இதில் சுவராஸ்யம் என்னவென்றால்,(அ)டிமைகள் திமுகவின் சுடுகாட்டு ஊழலை சந்தி சிரிக்க வைத்தவர் உமாசங்கர் என்பதற்காக,அவரது பணியில் இருந்து தூக்கி எறியப்பட்டு,உப்பு சப்பு இல்லாத ஒரு துறைக்கு அவரை அதிகாரியாக நியமித்தார் தற்போதைய ஊழல் குற்றவாளியும்,சிறைக் கைதியுமான ஜெயலலிதா.
ஆனால் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும், பணி உயர்வைக் கொடுத்து கூடவே புதிதாக உருவாக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராகவும் உமாசங்கரை நியமித்தார் தாத்தா.. இது எதோ தாத்தா கலைஞர் ரொம்ப நேர்மையானவர் போலவும்,அதனால் தான் உமாசங்கர் என்ற நேர்மையான அதிகாரியை மீண்டும் தன் ஆட்சியில் பதவி உயர்வு கொடுத்து கொண்டு வந்தார் என்பது போலவும் திமுகவினர் பில்டப் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள்.
ஆனால் எதிரியின்(ஜெயலலிதாவின் சுடுகாட்டு ஊழல்)எதிரி நமக்கு நண்பன் என்பது மட்டும் தான் தாத்தாவின் கணக்கே தவிர, மற்றபடி தாத்தா ஒன்றும் ஊழலை வெறுத்தவரும் அல்லர் அல்லது அவரும்,அவர் குடும்பமும் ஊழலில் திளைக்காதவர்களும் அல்ல.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து தாத்தாவோடு வந்து நின்ற லடாய்.
மதுரை தினகரன் அலுவலக எரிப்பில்,தாத்தா மற்றும் மாறன் சகோதரர்கள் முட்டிக் கொண்டதில்,கடுப்பான தாத்தா கலைஞர் என்ற புதிய தொலைக்காட்சி சானலை உருவாக்கினார், அந்த நேரத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி உருவாக உமாசங்கருக்கு ஒப்புதலும் தந்தார்.
அரசு கேபிளை உமாசங்கர் உருவாக்கிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து சிக்கல்களை உருவாக்கிய கேடி(மாறன் பிரதர்ஸ்)சகோதரர்களின் சுமங்கலி கேபிளை அரசுடமையாக்க வேண்டும் என்ற உமாசங்கரின் கோரிக்கை வலுக்கும் நேரத்தில், தாத்தாவின் கண்கள் பனிக்க, கேடிகளும், தாத்தாவும் ஒன்று சேர, அரசு கேபிள் அப்படியே முடங்கிப் போனது.
அரசு கேபிள் விடயத்தில் உமாசங்கரின் நடவடிக்கைகள் இன்னும் துரிதமாகவும்,கூடவே எல்காட்டின் எழுநூறு கோடிக்கும் அதிகமான ஊழலை உமாசங்கர் வெளிக்கொண்டு வரவும், பொறுக்க முடியாத தாத்தாவால் உமாசங்கர் பந்தாடப் பட்டது மட்டும் அல்லாமல்,அவரது ஐ.ஏ.எஸ் பணிக்கே வேட்டு வைக்கும் வேலையை செய்தவர் கருணாநிதி. போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக பொய் குற்றம் சுமத்தி உமாசங்கரை பணி நீக்கமே செய்தார் தாத்தா.
ஐ.ஏ.எஸ் தேர்வாகும் போது தலித் என்று போலி சான்றிதழ் கொடுத்து உமாசங்கர் பணியில் சேர்ந்ததாக தாத்தாவின் குற்றசாட்டு.
தான் ஒரு இந்து தலித் தான் என்பதை சட்டத்தின் துணையோடு நீதிமன்றத்தில் நிரூபித்தார் உமாசங்கர்.ஆகவே அவரது பணி நீக்கம் தவறு என்று நீதிமன்றம் சொல்லி,அதன் மூலம் கருணாநிதி முகத்தில் கரியைப் பூசினார் உமாசங்கர்.
அப்படிப்பட்ட நேர்மைக்கும்,துணிச்சலுக்கும் சொந்தக்காரன். வளைந்து,நெளிந்து இருந்திருந்தால் உயர் பதவிகள் வாய்த்திருக்கும்.பெரிய பணக்காரனாக உலா வந்து இருக்கலாம் உமாசங்கர்..
வேற என்ன செஞ்சு இருக்கார் உமா சங்கர்? ஊழல் ஒழியும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் E-Governance மூலம் பட்டா,சிட்டா, சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ்,முதியோர் ஓய்வூதியம் போன்ற அனைத்தையும் இணைய மயமாக்கியதோடு, ஊழலை ஒழிக்கும் புதிய முறையை உருவாக்கிக் காட்டினார்.
அனைத்து சான்றிதழ்களும், குறிப்பிட்ட தினங்களுக்குள் மக்களுக்கு போய் சேர வேண்டிய கட்டாயம், இதன் மூலம் இடைத்தரகர்களை ஒழித்தார், தீர்வுகளை எளிமையாக்கினார்.
அடுத்து நியாவிலைக் கடைகளில் நடக்கும் அட்டூழியங்களை ஒழிக்கும் விதமாக,புதிய எந்திரம் ஒன்றை குறைந்த விலையில் உருவாக்க சொல்லி,கூடவே ஜிபிஎஸ் கருவியோடு இணைத்து கடைகளை கண்காணித்து, நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் அளவுகள்,கையிருப்பு,போன்ற அனைத்தையும் கணினி மயமாக்கும் பணியையும் செய்து முடித்தார்.ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதற்கு முன் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இப்படி மக்கள் சேவைக்காக இரவு பகலாக உழைத்தவர். இன்றைய இளைஞர்கள் சொல்லும்,கணினி மயமாக்கினால் ஊழல் ஓரளவுக்கு குறையும் என்பதை,அப்படியே நடைமுறைப் படுத்திக் காட்டியவர் உமாசங்கர். இணைய மயமாக்கலில் திருவாரூர் மாவட்டத்தை இந்தியாவுக்கே முன் உதாரணமாக எடுத்துக் காட்டிய நேர்மையான மற்றும் இளமையான சிந்தனைகளோடு வலம் வந்தவர் தான் உமாசங்கர்.
இப்படிப்பட்ட நேர்மையான சகாயம், உமாசங்கர் போன்றவர்கள் தற்போது வகிக்கும் பதவிகளைப் பார்த்தீர்கள் என்றால் உப்புக்கு சப்பான பதவிகள்.
இருபத்து மூன்று ஆண்டு கால பணியில் இருபது நான்கு முறை பணி மாற்றம் செய்யப்பட்டவர் சகாயம் என்றால், முப்பத்தொரு ஆண்டு கால பணியில் ஐம்பது இரண்டு முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு பந்தாடபட்டவர் இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜித் சௌத்ரி. இந்தியாவில் நேர்மைக்கு கிடைத்த தண்டனை இது தான். இது தான் இந்த தேசத்தின் லட்சணம்.
சரி உமாசங்கர் மீதான தற்போதைய குற்றச்சாட்டுக்கு வருவோம்.
உமாசங்கர் ஒரு கிறிஸ்தவர்,அவர் போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தார் என்கிறார்கள்.
ஆனால் அவர் ஒரு தலித் குடும்பத்தை சேர்ந்தவர். தாயார் கிறிஸ்தவர். தந்தை இந்து. ஆகவே அவர் தலித் இந்து என்று சான்றிதழ் வாங்கி இருப்பதில் எந்த தவறும் இல்லை.
இங்கே விமர்சிக்கப் பட வேண்டியது அரசாங்கத்தை தான். காரணம் என்னவென்றால்,ஒரு தலித் “இந்து”வாக இருந்தால் பட்டியல் சாதி(SC) சலுகைகள் அனுபவிக்கலாம், ஆனால் அதே தலித் கிறிஸ்தவராக மதம் மாறி விட்டால்,அவருக்கு பட்டியல் சாதி சலுகைகள் எதுவும் கிடையாது என்பது என்ன விதமான கொடுமை?
அது மட்டுமல்ல தலித் கிறிஸ்தவர்கள்,பட்டியல்(SC)சாதியில் இருந்து இரண்டு அடுக்குகள் மேலே தள்ளப்பட்டு பிற்படுத்தப் பட்டோர்(BC)பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.இது என்ன நியாயம்?அப்படியானால் மதத்தின் பெயரால் சாதிய சலுகைகளை, தீர்மானிக்கும் இந்திய அரசின் சட்டம் தவறு என்பது தான் இங்கே விமர்சிக்கப் பட வேண்டிய ஒன்று.
ஒரு தலித் இந்து, கிறிஸ்தவனாக மாறி விட்டால் அவனது பொருளாதாரம், மற்றும் உரிமைகள் எல்லாம் மாறி விடுமா என்ன? இன்று வரைக்கும் இந்த கேள்விக்கு விடை இல்லை.
ஆக உமாசங்கர் பிறப்பால் ஒரு தலித் இந்து என்பதால் அவர் மீதான பொய் குற்றசாட்டு அடிபட்டுப் போனது.
அடுத்து,அதெப்படி உமாசங்கர் ஐ.ஏ.எஸ் என்னும் ஒரு அரசு அதிகாரி மதப் பிரச்சாரம் செய்யலாம்?
(வெங்கடாச்சலம்)இறையன்பு என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நீண்ட காலமாக இந்து மத சொற்பொழிவு ஆற்றுகிறார். ஏன் இதுவரை எவனும் வாயே திறக்கலை? எத்தனையோ புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒரு அரசு அதிகாரி எப்படி புத்தகம் எழுதலாம், அதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றும் கேள்வி வரும் அல்லவா?
பேசுவது தனி மனித சுதந்திரம் என்று சட்டம் சொல்கிறது. இல்லை இல்லை. ஒரு அரசு அதிகாரி தனது மத அடையாளங்களையோ, மத பிரச்சாரத்தையோ பொது வெளியில் செய்யக் கூடாது என்கிறார்கள் ஒரு சிலர்.
என்ன காரணம் என்றால் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மதத்தை தூக்கிப் பிடித்தால்,அவர்கள் ஒரு சார்பாக செயல்பட நேரிடும் என்கிறார்கள். இன்னொரு கூட்டம் சொல்கிறது, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் சொல்லும் விடயங்களை,மக்கள் எளிதாக ஏற்பார்கள். எனவே உமாசங்கர் போன்ற உயர் அதிகாரிகளின் தாக்கம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இந்திய விண்வெளிக்கு செயற்கை கோள்களை, ராக்கெட்டை அனுப்பும் போது, திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் வைத்து பூஜை, புனஸ்காரங்கள் செய்கிறார்கள்.ராக்கெட் உருவாகும் போது அதன் தளத்தின் ஒவ்வொரு மூலையிலும்,இந்துக் கடவுள்களின் உருவ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. ராக்கெட்டில் ஓம் என்று எழுதி வைக்கிறார்கள்.
ஏன் இஸ்ரோ என்பது இந்துக்களுக்கு மட்டுமே ஆன நிறுவனமா என்ன? செயற்கை கோள்,ராக்கெட் உருவாக்கத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களின் உழைப்பும் இருக்கிறது,ஏன் மத நம்பிக்கை இல்லாத மனிதர்களின் உழைப்பும் இருக்கிறது.இதில் இந்துக்கள், இந்துக்கள் அல்லாத நம் அனைவரின் வரிப்பணமும் சேர்ந்தே தான் இருக்கிறது.அப்படியானால் வெங்கடாச்சலபதி கோயிலில் மட்டும் ராக்கெட்டின் மாடலை வைத்து பூஜை செய்வது என்ன நியாயம்?
ராக்கெட் கிளம்புவதற்கு முன், திருநீறு, தேங்காய் பழம் உடைத்தும், பூசித்தும் அனுப்ப வேண்டிய காரணம் என்ன?அங்கே உங்கள் மதப் பிரச்சாரம் என்ற விவாதம் என்ன ஆனது?
இஸ்ரோவின் தலைவராக எவர் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவரது நம்பிக்கை அவரது வீட்டுக்குள் தானே இருக்க வேண்டும். அதை எதற்கு வேலை தளங்களில் கொண்டு வருகிறார்கள்? இஸ்ரோ என்று மட்டும் அல்ல, டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்தியாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது தான் நடக்கிறது.
ஏன் அரசு அலுவலக வளாகங்களில் இந்து கோயில்கள் மட்டும் இடம் பெறுகின்றன,இந்து பண்டிகைகள் மட்டும் கொண்டாடப் படுகின்றன?அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? இந்துக் கடவுள்கள் மட்டுமே அரசு அலுவலகங்களின் முகப்புகளை தாங்கி நிற்க வேண்டிய அவசியம் என்ன?
உமாசங்கர், இதற்கு முந்தைய காலங்களில்,இந்துக் கோயில்களின் தேர் திருவிழா நேரங்களில்,தேர் வடத்தை எடுத்துக் கொடுத்து துவக்கி வைத்தாரே,அப்போது ஒருவரும் அரசு அதிகாரி எப்படி தேர்வடம் இழுக்கலாம் என்று கேள்வி கேட்கவில்லையே ஏன்?
அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றால், மற்ற மத வழிபாடுகளில், விழாக்களில் கலந்து கொள்ளாதது ஏன் என்று யாராவது விமர்சித்தது உண்டா?
இன்றைக்கு கிறிஸ்தவராக அறியப்படும் உமாசங்கர், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகவோ,ஒரு சார்பு நிலையாகவோ செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால்,இங்கே தாராளமாக விவாதிக்கலாம்.அவர் நேர்மையாக செயல்படாத பட்சத்தில் கட்டாயம் விவாதத்துக்கு உட்படுத்தலாம். அவரது பணியில் குறைபாடுகள் இருந்தால் கேள்வி கேட்கலாம்.
அரசு பதவிகளில் இருக்கும் எத்தனையோ பேர், பலதரப்பட்ட விவாதங்களில், சொற்பொழிவுகளில் பங்கு பெறுகிறார்கள், பட்டிமன்றங்களில் பங்கு பெறுகிறார்கள், கம்பராமாயணம் என்கிறார்கள், மகாபாரதம், பகவத் கீதை என்றெல்லாம் பேசாமலா இருக்கிறார்கள்?
உமாசங்கர் தன் பணி நேரத்தில், பணி செய்யாமல் அலுவகத்துக்கு வருவோர் போவோருக்கெல்லாம் இயேசுவைக் குறித்து பிரசங்கம் பண்ணினால் கேள்வி கேட்கலாம். ஒரு கட்சியில் சேர்ந்து பணியாற்றினால் கேள்வி கேட்கலாம்.
அதை விட்டு விட்டு, வாரக் கடைசியில் அவர் மத பிரச்சாரம் செய்கிறார், மத துவேசம் செய்கிறார், அதனால் கலவரம் வரலாம் என்று வராத கலவரத்தை எல்லாம்,அவர் தான் தூண்டுவதாக கற்பனை செய்து கொண்டால் அந்த கற்பனை நோய்க்கு உலகில் மருந்து எங்கும் இல்லை.
இந்தியாவில் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகளை விடவா, பெரிய மதக் கலவரத்தை உமாசங்கர் உருவாக்கி விடுவார்?
குஜராத் மாநிலத்தின் அனைத்து மக்களையும்,எவ்வித பாகுபாடும் இன்றி சமமாக நடத்துவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, முதலைமச்சர் பதவி ஏற்றுக்கொண்ட மோடி செய்த படுகொலைகளை விடவா,உமாசங்கர் பெரிய மதக் கலவரத்தையும், படு கொலைகளையும் செய்து விட்டார்.
ஒரிசாவில் காரில் தூங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டேயின்ஸ் மற்றும் அவரது சின்னஞ்சிறு குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங் அமைப்பை சேர்ந்த தாராசிங் போன்றவர்கள் செய்தது போன்ற கொடூரங்களையா மக்களுக்கு செய்து விட்டார் உமாசங்கர்.
மசூதி இடிப்பின் மூலம் இந்திய இறையாண்மையை கேலிக்குள்ளாக்கி, ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி,அனைத்து ரயில் நிலையங்கள்,பேருந்து மற்றும் விமான நிலையங்கள், கடைத் தெருக்கள் அனைத்திலும் மோப்ப நாய்களைக் கொண்டு,மோந்து பார்த்து திரியும் அளவுக்கு,இந்த தேசத்தின் மீது தீவிரவாத பயத்தை திட்டமிட்டு உருவாக்கிய,கேடுகெட்ட வேலையையா செய்து விட்டார் உமாசங்கர்?
இயேசு நாதர் பிறப்பை கேலிக்குள்ளாக்கும் எத்தனையோ பிஜேபி எம்பிகள் இருக்கிறார்கள்,பொறுப்பற்ற கட்சித் தலைமைகள் இருக்கின்றன. இந்த நாட்டில் இந்துக்கள் அல்லாதவர்கள்,முறை தவறி பிறந்தவர்கள் என்று சொல்லும் கேடு கெட்ட பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருக்கிறார்கள். என்ன பெரிய தண்டனை கொடுத்தீர்கள்? கண்டித்தீர்களா?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கிறிஸ்துவத்தின் மீது விமர்சனம் வைத்தால் கூட ஏற்கலாம்.ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும், பிஜெபிகள் கிறிஸ்தவத்தின் மீது விமர்சனம் வைப்பது தான் கேலிக்குரியது.
கிறிஸ்துவின் பிறப்பை குறித்து கேலி பேசுகிறீர்களே! உங்கள் மத கடவுள்கள், அவர்களின் பிறப்புகள், வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து நூறு அல்ல ஆயிரம் கேலிக்குரிய கேள்விகளை என்னால் கேட்க முடியும்.ஆனால் எவருடைய நம்பிக்கையையும் கேலிக்குள்ளாக்குவது நம் நோக்கம் அல்ல.
அரசு அதிகாரிகள் என்று மட்டும் அல்ல, தனி மனிதர்கள் கூட எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற சுய தணிக்கை/கட்டுப்பாடு வேண்டும்.
யாரோ ஒரு ஹெச்.ராஜா போன்ற கேடு கெட்ட மத துவேசிகளுக்கு பதில் சொல்வதாய் எண்ணிக்கொண்டு,இந்து மதத்தை பின்பற்றும், என் சக நண்பனின் நம்பிக்கையை நான் கேலிக்குள்ளாக முடியாது.
பிரம்மாவின் காலில் இருந்து பிறந்ததால் சூத்திரன் என்றும் வைசியன் என்றும்,அவன் தாழ்த்தப்பட்டவன் என்றும்,தலையில் இருந்து பிறந்தவன் பார்ப்பனன்,அவன் உயர்ந்தவன் போன்ற அடிப்படை பிற்போக்குத் தனங்கள்,தேவதாசி முறை,உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றுக்கே இங்கே எவராலும் பதில் சொல்ல இயலாது. இதுல பிற மதங்களின் நம்பிக்கையை கேலிக்குள்ளாக்க கிளம்பிட்டானுங்க!
இங்கே யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பரப்பட்டும். விருப்பம் உள்ளவன் ஏற்கப் போகிறான். விருப்பம் இல்லாதவன் விலகிப் போகிறான்.
ஐயோ ஏழைகளுக்கு காசு கொடுத்து தான்,கிறிஸ்தவர்கள் அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற உங்களின் நீண்ட கால கற்பனைக்கு சவாலாகவே சொல்கிறேன், இன்னமும் வறுமையில் உழலும் எத்தனையோ கிறிஸ்தவ கிராமங்கள் இருக்கின்றன.ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியிடம் இல்லாத பணமா?
அணு உலைக்கு எதிராக போராடும் மக்களைப் பார்த்தும் வெளிநாட்டுப் பணம் வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள்,அமெரிக்க கைக்கூலிகள் என்கிறார்கள். அதைக் கடைசி வரை நிரூபிக்க இயலாமல் போனது ஒரு பக்கம்.
ரஷ்ய அணு உலையை எதிர்த்தால், அமெரிக்க கைக்கூலி என்று கூவும் தேசிய கட்சிகளே, இன்றைக்கு ஒபாமாவோடு,உங்க மோ(ச)டி அமெரிக்க அணு ஒப்பந்தம் போட்டு இருக்கிறாரே! அப்படியானால் இங்கே யார் அமெரிக்க கைக்கூலி என்று சொல்ல முடியுமா?
வாதிட முடியவில்லை என்றால்,அந்நிய நாட்டு கைக்கூலி என்பதைத் தவிர வேறேதும் பேசத் தெரியாத குழந்தைகளிடம் எதைப் பற்றி பேச?ஒருவேளை அமெரிக்க அணு உலைகளை எதிர்த்தால்,ரஷ்ய நாட்டின் கைக்கூலிகள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
ஏழை மோடி ஒரு நாள் கூத்துக்கு அணியும் கோர்ட் சூட்டின் விலையே பத்து லட்சம் என்கிறார்கள்.தேர்தல் செலவுக்கும், உங்கள் கேடித் தனத்துக்கும் பல்லாயிரம் கோடி செலவு செய்ததாக கணக்கு சொல்கிறார்கள். அம்பானி, அதானி போன்ற பண முதலைகள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
சாகித்திய விருதுக்காகவும்,இன்ன பிற நலன்களுக்காகவும் உண்மைக்கு புறம்பாக, சந்தர்ப்பவாதம் பேசி “தாய் மதத்துக்கு திரும்புங்கள்” என்று பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசும் ஜோடி.க்ரூஸ் போன்ற பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பணத்துக்காக தான் ஏழை இந்து மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார்கள் என்றால்,நீங்களும் உங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து, வறுமையில் வாடும் கிறிஸ்தவ குடும்பங்களை, இந்துக்களாக மாற்றுங்களேன். முயற்சித்து பாருங்களேன்,யார் வேண்டாம் என்று சொன்னது?
இந்த தேசத்தில் எண்பது சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் பெரும்பான்மை இந்துக்களை,வெறும் மூன்றே மூன்று சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் கிறிஸ்தவர்கள் அவர்களோடு நைசாக பேசி, பணம் கொடுத்து மதம் மாற்றி விட முடியும் என்று நீங்கள் நம்புவீர்கள் என்றால்,பெரும்பான்மையான நீங்கள் ஏன், இந்த வெறும் மூன்றே மூன்று சதவிகித கிறிஸ்தவ மக்களை,எவ்வித வன்முறையும் இன்றி,இந்துக்களாக மாற்ற முயற்சிக்கலாமே! எண்பது சதவிகித மக்களை விட மூன்று சதவிகித மக்களை மாற்றுவது எளிதான விடயம் தானே!
கரசேவை என்ற பெயரில் செய்யும் மசூதி இடிப்பு மற்றும் தேவாலய இடிப்புக்கு பதிலாக இந்து மதம் உயர்ந்த மதம், உன்னதமான மதம், இதன் கோட்பாடுகளை நீங்கள் கடைபிடியுங்கள் என்று மக்களிடம் போய் பேசுங்களேன். அவர்கள் உங்களையும், உங்கள் மதத்தையும் ஏற்றுக் கொள்ளட்டும்.
அதுக்கு முன்னாடி இந்த அரசு அலுவலகங்களில் இருக்கும் இந்து சாமி படங்களை அகற்றுங்கள், அரசு அலுவலக வளாகங்களில் இருக்கும் இந்து கோவில்களை அகற்றுங்கள். ராக்கெட் அனுப்பும் போது, தேங்காய் உடைப்பதையும்,ராக்கெட் மாடலை வெங்கடாச்சலபதி கோவிலில் வைத்து பூஜை செய்வதையும் நிறுத்துங்கள்.
இங்க சில தம்பிமார்கள், அலுவலக நேரம் தவிர, மோடி விடுமுறை நாட்களிலும், மாலை ஆறு மணிக்கு மேலும் இந்து மதப் பிரச்சாரம் செய்தால் எப்படி இருக்கும் என்று எதோ உலக மகா கேள்வி ஒன்றை முன் வைக்கிறார்கள். அடேய் யப்பா ராசாக்களா!
இப்ப மட்டும் என்ன வாழுது?
மோடி ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு மாசமா முழு நேர வேலையா, மதப் பிரச்சாரம் தானே நடக்கிறது. சமஸ்கிருதம் வளர்ப்போம், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்போம்,மதசார்பற்ற நாடு என்ற வார்த்தை வேண்டுமா என்று விவாதிப்போம்,இந்துக்கள் அல்லாதார் முறை தவறி பிறந்தவர்கள், இந்தியாவை இந்து நாடாக அறிவிப்போம் என்று தினம் தினம் இந்த வேலையை மட்டும் தானே பார்க்கிறார். இதுல என்ன பகுதி நேரம் வேண்டிக் கிடக்கு:)
ஊருக்கு உபதேசம் சொல்றதுக்கு முன்னாடி நம்ம யோக்கியனா இருக்கணும்.
சட்டத்தின் துணையோடு, தன் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் உமாசங்கரின் செயல்களை வேடிக்கை மட்டும் பாருங்கள்.
உமாசங்கர் பேசுவது எல்லாம் சரி என்றோ, அல்லது தவறு என்பதோ அல்ல என் வாதம். அவரது பேச்சுரிமை சார்ந்தது மட்டுமே!
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு சொன்ன வார்த்தைகளை மட்டும் இங்கே பதிகிறேன்.
நீதியரசர் சந்துரு:
கோர்ட்கள் முதல்கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் பூஜை நடத்தி பிரசாதம் தரப்படுகிறது. அலுவலக வளாகங்களில் கோவில்கள், பூஜைகள் எல்லாம் உண்டு. வெள்ளிக் கிழமைகளில் தொழ முஸ்லீம்களுக்கு அனுமதியும் தனி இடமும் உண்டு. இதெல்லாம் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது அலுவல் நேரமற்ற நேரத்தில், தனிப்பட்ட ஒரு கூட்டத்தில் பேசும் உமாசங்கரைக் குறிவைக்க காரணம் என்ன?
-ஆன்டனி வளன்
நன்றி: http://antonyvalan.blogspot.in/ - நெய்தல்.
இதற்கு கொடுக்கப்பட்ட பின்னூட்டம்:
Srinivasan Mohana Krishnan: 31 ஜனவரி, 2015 ’அன்று’ 6:05 பிற்பகல்
பொது ஜனத்தின் மனம் புண்படுத்தி கலவரம் உண்டாக்க கூடாது என்பது காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ சபைகளில் பேசி கிறிஸ்தவர்களின் அமைதி பங்கம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் நியாயம். கிறஸ்தவ சபைகளிலே பேசக்கூடாது என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம்? மற்ற மத IAS அதிகாரிகளை கடமையின் நிமித்தம் வெளியூருக்கு செல்லும் போது புண்ணிய தல கோவில்களை தரிசிப்பதில்லையா? பூஜைகள் செய்வதில்லையா? இங்கு கேள்வியே சிறுபான்மையினரின் மதத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டு அதை பிரசங்கிக்க கூடாது என்பது, நியாயமா? அது அரசியல் சாசனத்திற்கும், சாமான்ய நியாயத்திற்கும், நீதி நிலைநாட்டும் மன்றங்களும் எதிரானதல்ல்லவா? மனசாட்சியோடு இக்கேள்விகளை கேட்டால் விடைகிடைக்கும். ஸ்ரீ. மோகன கிருஷ்ணன் (பிராமண பொறியாளர், கிறிஸ்துவை ஏற்று மிஷனரியாக கடந்த 21 வருடங்களாக பணியாற்றுகிறவன்)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum